Saturday 14 September 2013

நிதி வழங்கப்படாததால் மாணவ விளையாட்டு வீரர்கள் விரக்தி; "ஊனமான" விளையாட்டு துறையால் சோர்வு


                மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பள்ளி விளையாட்டு போட்டிக்கான நிதி வழங்கப்படாததால் மாணவ விளையாட்டு வீரர்கள் விரக்தியில் உள்ளனர். பள்ளி கல்வித்துறையில், மாணவர்களிடையே விளையாட்டை
ஊக்குவிக்கும் வகையில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.7ம், 9 மற்றும் பத்தாம் வகுப்புக்கு தலா ரூ.14ம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கு தலா ரூ.21ம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். விளையாட்டு போட்டிகளுக்கான நுழைவுக் கட்டணம், போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவு உட்பட பல்வேறு செலவினங்களுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும்.
                           மதுரை மாவட்டத்தில் 14 மண்டலங்களில், ஒவ்வொன்றிலும் 700 முதல் 800 மாணவ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்நிதி வழங்கப்படவில்லை. இதனால், மாணவ வீரர்கள் விளையாட, வெளியூர் செல்லும்போது சாப்பாடு, பயணம் உட்பட செலவுகளை அவர்களே மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால், பண வசதி இல்லாத, திறமை படைத்த மாணவர்கள் பலர் மாவட்ட, மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

                          கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவர்களுக்கு விளையாட்டு நிதி, 30 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை தொடர்கிறது. டிவிஷன் மற்றும் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் பயணச் செலவு தவிர்த்து, சாப்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு ரூ.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஒரு வீரர் ரூ.50க்குள் மூன்று வேளை சாப்பிட முடியுமா? பள்ளி கல்வித்துறையில் விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி கண்துடைப்பாகவே உள்ளது. நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து, இதை மாற்றியமைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment