Saturday 14 September 2013

காந்திய வழியில் ஒரு பள்ளி! கீதா மற்றும் எம்.செந்தில்குமார்


           மதுரை அருகே உள்ள டி. கல்லுப்பட்டியில் இயங்கி வரும் காந்தி நிகேதன் பள்ளியை, நாட்டில் பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஐந்து பள்ளிகளில் ஒன்றாக என்சிஇஆர்டி தேர்வு செய்துள்ளது. மதுரை அருகே உள்ள டி.கல்லுப்பட்டியில் இயங்கி வருகிறது காந்தி நிகேதன் பள்ளி. தேசிய கல்வி
ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி), நாடு முழுவதும் பாரம்பரிய கல்வி முறையைப் பின்பற்றும் ஐந்து பள்ளிகளைத் தேர்வு செய்துள்ளது. அதில் தென்னிந்தியாவிலிருந்து தேர்வு பெற்ற ஒரே பள்ளி காந்தி நிகேதன். இங்கு காந்தியின் கருத்துக்களோடு கூடிய கல்வியை கடந்த 65 வருடங்களாக கற்பித்து வருகிறார்கள். இந்தப் பள்ளி உருவாகக் காரணமாக இருந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் வேங்கடாசலபதி. காந்தி நிகேதன் ஆசிரமத்தின் நிறுவனரான கோ.வேங்கடாசலபதி, ‘தமிழக கிராம பஞ்சாயத்துக்களின் தந்தைஎன அழைக்கப்படுகிறார். இவர் காந்தியின் அறிவுரையைப் பின்பற்றி விதவையை மறுமணம் செய்தவர்.
                             காந்தி நிகேதன் துவக்கப்பட்ட பின்னணியை பள்ளியின் தற்போதைய தலைவரான டாக்டர் ஆர்.வெங்கடசாமி விளக்கினார். “கோ. வேங்கடாசலபதி, கோபிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் இருந்த சிறையில் மரண தண்டணை பெற்ற கைதி ஒருவரின் மரண தண்டனை முடிவாகி விட்ட போதும்கூட, அது பற்றி எந்தச் சலனமும் இல்லாமல் உற்சாகமாக தைரியமாக இருந்தார். அதைப் பார்த்த வேங்கடாசலபதி, ‘இந்த நிலையில் உன்னால் எப்படி இப்படி இருக்க முடிகிறது?’ என்று கேட்டிருக்கிறார். ‘இந்த தைரியத்தை கொடுத்தது என் ஆசிரியர்கள்தான். ஒரு லட்சியத்திற்காக வாழும்போது உயிரைக் கொடுக்கவும் தயங்கக் கூடாது. தைரியமாக நாம் எடுத்த காரியத்தில் செயல்பட வேண்டும் என்று அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்என்றார். இதைக் கேட்டவுடன், கல்வியின் மூலம் இதுபோன்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றால், நாம் ஏன் அதை செய்யக் கூடாது என்று வேங்கடாசலபதிக்குத் தோன்றியது. சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் முதல் வேலையாக பசுமலையில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கே லார்டு பீன் என்ற ஆங்கிலேயப் பாதிரியாரின் நட்பு கிடைத்தது. 1940-இல் குமாரசாமி ராஜா, .பி.ராமசாமி ரெட்டி, காமராஜர் போன்றோரின் நட்பும் அவருக்கு இருந்தது.
                        தன்னுடைய 23-ஆவது வயதில் காந்திஜியை சந்தித்தார் வேங்கடாசலபதி. தமிழகத்திற்கு வந்திருந்த காந்தி, விருதுநகர் வழியாக ராஜபாளையம் செல்லும்போது வழியில் நல்ல மழை. பயணத்தை தொடர முடியவில்லை. ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார்கள். மாலை ஆகிவிட்டது. காந்திக்கு பிரார்த்தனை மிகவும் முக்கியம். அங்கேயே தன்னுடைய பிரார்த்தனையை ஆரம்பித்தார். ‘யார் பாடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது வேங்கடாசலபதி பாடினார். அவரை காந்தியிடம், ‘திறம்பட உழைக்கக் கூடியவர்என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். ‘அப்படியானால் நீங்கள் ஏன் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தக்கூடாது?’ என்று கேட்டார் காந்தி. வைத்தியநாத ஐயர் மற்றும் மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்புராமன் ஆகிய இருவரின் உதவியுடன் 1940-இல் காந்தி நிகேதனை ஆரம்பித்தார் வேங்கடாசலபதி. காந்தி நிகேதன் ஆசிரமம்தென்னிந்தியாவின் வார்தாஎன அழைக்கப்படுகிறது. மேலும், ‘காந்திய பொருளாதாரத்தின் தந்தைஎன அழைக்கப்படும் ஜே.சி.குமரப்பா தன் வாழ்நாளின் கடைசி நாட்களை இந்த ஆசிரமத்தில்தான் கழித்தார். அவரின் சமாதியும் இந்த வளாகத்திலேயே அமைந்துள்ளதுஎன்று பழைய வரலாற்றை அவர் நினைவு கூர்ந்தார்.
மற்ற பள்ளிகளிலிருந்து காந்தி நிகேதன் எப்படி வேறுபடுகிறது?
                          “இந்த ஆசிரம வளாகத்தில் 1947-ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.தற்போது மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. பள்ளி ஆரம்பித்தபோது அவரின் மனதில் இரண்டு விஷயங்கள் தெளிவாக இருந்தன. ஒன்று, நல்ல பள்ளி ஆரம்பிக்க வேண்டும். அடுத்து, கிராம மக்களுக்குப் பயிற்சி தர வேண்டும். இந்த இரண்டிலும் இன்றுவரை தெளிவாக உள்ளோம். வெறும் பாடப் புத்தகங்களில் இருப்பதை மட்டும் மாணவர்களுக்கு நாங்கள் கற்றுத் தருவதில்லை. மதிப்புக் கல்வி (Value education ) எனப்படும் வாழ்க்கை நெறிமுறைகளையும் சேர்த்தே கற்றுத் தருகிறோம். தினமும் காலையில் முதல் வகுப்பே, வாழ்க்கை நெறி வகுப்புதான். இதில் தேசத் தலைவர்கள், தேசத் தொண்டர்கள், அறிவியல் அறிஞர்கள் என்று, நம்முடைய வழிகாட்டிகளாக இருப்பவர்களைப் பற்றி ஆசிரியர்கள் சொல்வார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராமாயணம், மகாபாரதம் கற்றுத் தரப்படும். பள்ளியில் நடக்கும் பிரார்த்தனையில் எல்லா மத வழக்கங்களும் பின்பற்றப்படுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாப் பண்டிகைகளையும் இங்கு கொண்டாடுகிறோம். டி.கல்லுப்பட்டியைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களை தத்து எடுத்துள்ளோம். அவர்களுக்கு அடிப்படை சுகாதாரம், இலவச மருத்துவ முகாம்கள், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்று கிராம மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையானதையும் தொடர்ந்து செய்கிறோம்.
                              சுமார் 25 ஏக்கர் பரப்பிலான எங்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் எங்கள் மாணவர்களே வேளாண் பயிற்சியை நேரடியாகப் பெறுகிறார்கள். இரண்டு பெரிய நூலகங்களை ஏற்படுத்தி உள்ளோம். வாசிக்கும் பழக்கம் பள்ளிப் பருவத்திலேயே வர வேண்டும் என்பதற்காக கட்டாய நூலக வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் உண்டு. பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு, இங்கு கைத்தொழில் பயிற்சியும் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. வாழ்க்கைக் கல்வியுடன் சேர்ந்த பாடப் புத்தகங்கள், எங்கள் மாணவர்களை சமுதாய அக்கறை உள்ளவர்களாக உருவாக்குகிறது. ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆண்டிற்கு 20 லட்ச ரூபாய் செலவாகிறது. நன்கொடையாளர்கள் தரும் நிதியைக் கொண்டே பள்ளியை நடத்துகிறோம்என்றார். “ஆரம்பத்தில் தொழிலோடுகூடிய கல்வி என்ற கொள்கையின் அடிப்படையின் ஆதாரப்பள்ளியாக இயங்கி வந்தது இந்தப் பள்ளி. மாணவர்களுக்கு விவசாயம், நெசவு, நூற்பு போன்ற கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட்டன.பிறகு அரசின் அங்கீகாரத்தோடு உயர்நிலைப்பள்ளியாகவும் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறதுஎன்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துராமலிங்கம்.

                          இவர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும்கூட. இங்கு பணியாற்றும் 40 சதவீத ஆசிரியர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே. மாணவர்களுக்கு இன்றும் கைத்தொழில்கள் கற்றுத்தரப்படுகின்றன. குறிப்பாக விவசாயப் பிரிவு சிறந்த முறையில் இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்திலேயேகோசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் பசுக்களைப் பராமரிப்பது, பால் கறப்பது, அதை வீடுகளுக்கு கொண்டு சென்று ஊற்றுவது, வரவு - செலவு கணக்குப் பார்ப்பது என அனைத்தும் மாணவர்களே. பசுக்களுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் பள்ளிக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் மாணவர்களாலேயே விளைவிக்கப்படுகின்றன. மாட்டுச் சாணங்களிலிருந்து உரமும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. “செய்முறையோடு கல்வி கற்பதால் விவசாயப் பிரிவு மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கால்நடை மருத்துவர்கள் எங்கள் மாணவர்கள்தான்எனப் பெருமையாகக் கூறுகிறார் விவசாயப் பிரிவு ஆசிரியரான சாந்தி.

No comments:

Post a Comment