Tuesday 17 September 2013

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதில் தாமதம்


            பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர ஆசிரியர்களாக பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், கட்டட கலை உள்ளிட்ட பாடங்களில், 16,549 ஆசிரியர்கள் பணிபுரிந்து
வருகின்றனர். இவர்கள், வாரத்திற்கு, மூன்று நாட்கள், ஒரு நாளைக்கு, அரை நாள் வீதம் பணிபுரிய வேண்டும். இது, அரசு விதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இவ்விதியை, எந்த பள்ளிகளிலும் பின்பற்றுவதில்லை என, பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகின்றனர். பகுதி நேர ஆசிரியர்களும் வேறு பணிகள் கிடைக்காத காரணத்தால், இதில் தொடர வேண்டிய கட்டாயம் இருப்பதும் அவர்கள் இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றன. அவர்கள் பணி வரன்முறையை அரசு செய்வதற்கு அதிக செலவினம் ஏற்படும் என்றாலும், அவர்கள் பணி குறித்த விஷயங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம், கணினி போன்ற பாடத்திட்டங்கள் குறித்த பயிற்சி, கிராமப்புற மாணவர்களுக்கு முறையாகச் சென்றடையும்.

                      இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தினர் கூறியதாவது: தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்தலால், பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேரம் பணிபுரிய வேண்டிஉள்ளது. இதைத் தவிர்க்க, பள்ளி கல்வி இயக்குனர், அனைத்து பள்ளிகளுக்கும் பல முறை கடிதம் அனுப்பியும், பெரிய அளவில் பலனில்லை. தமிழகத்தில், கோவை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பகுதி நேர ஆசிரியர்கள் பலர் அதிக பணி நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கோடை விடுமுறை அறிவிக்கப்படும், மே மாதத்துக்கு இவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. மேலும், ஏப்ரல் மற்றும் ஜூன் மாத வேலை நாட்களில், பிடிக்கப்பட்ட சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment