Tuesday 25 June 2013

அரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்


          இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர் தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம்,
தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அப்துல்ரஷீத். இவரது மகள் ஷாக்கிராபேகம். 2012ம் ஆண்டுக்கான இந்திய வனத்துறை பணி தேர்வில் 56வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தனது தொடக்கக் கல்வியை தொண்டமாந்துறை பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை தொண்டமாந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார்.
                            இதைத்தொடர்ந்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி., அக்ரி பட்டப்படிப்பு முடித்தார். தொடர்ந்து .சி..ஆர்., நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்று, டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.எஸ்.சி., ஜெனடிக்ஸ் மற்றும் பி.ஹெச்.டி., ஜெனடிக்ஸ் படிப்பு முடித்து, குஜராத்தில் உள்ள தேசிய நிலக்கடலை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இவர் 2012ம் ஆண்டுக்கான இந்திய வனத்துறை பணி தேர்வில் 56வது இடத்தை பிடித்து சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடம் பெற்றதற்காக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தரேஷ்அஹமது, ஷாக்கிராபேகத்தை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்.
                              அப்போது அவர் தெரிவித்ததாவது: "இந்திய வனப்பணி தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாக்கிரா பேகம் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக பயிற்சி வகுப்பு அளித்தது. சென்ற ஆண்டில் 80க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு பயிற்சி பெற்று வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இவர் ஒரு உந்துகோலாக விளங்குவார். பெண்ணாக இருந்தாலும் உயர்கல்வி பெற்று இந்திய வனப்பணி தேர்வில் பங்கு பெற தங்கள் மகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கிய இவரின் தாய், தந்தையரை நான் பாராட்டுகிறேன்.

                 பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 வகுப்பு வரை படித்தால் போதும் என்ற பெற்றோரின் எண்ணத்தை இவரது வெற்றி மாற்றும் என நம்புகிறேன். இவரை முன்னுதாரணமாக கொண்டு பெரம்பலூர் மாவட்ட பெற்றோர் அனைவரும் தங்கள் பெண் குழந்தைகளை உயர்கல்வி கற்று, சாதனையாளர்களாக உயர் பணிகளில் ஈடுபட அனைத்து முயற்சிகளையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஷாக்கிராபேகத்தின் பெற்றோர் அப்துல்ரஷீத், ஷாஜாதிபேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment