தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கேரள
மாநிலம் மலப்புரம் மஞ்சேரி யானைக்கயம் பெரும்பலத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவர் இரும்பழி எனுமிடத்தில் உள்ள பள்ளியில் 1992ல் ஆசிரியராக சேர்ந்தார். வீட்டிலிருந்து மூன்று பஸ்கள் மாறினால்தான் பள்ளியை அடைய முடியும். அதுமட்டுமின்றி பஸ் ஏறுவதற்கு வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கவும் வேண்டும். இந்த ரூட்டில் பஸ் சர்வீஸ் மிக குறைவு. எப்படிதான் வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்தாலும் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு அப்துல் மாலிக்கால் வரமுடியவில்லை.வேலையில் சேர்ந்து முதல் கல்வியாண்டு முடிந்த பிறகுதான் பள்ளிக்கு எளிதில் வர கடலுண்டி ஆற்றை கடந்தால் போதும் என்ற யோசனை பிறந்தது. அன்று முதல் இன்று வரை கடலுண்டி ஆறு, மாலிக்கின் தினசரி போக்குவரத்து வழியாக மாறிவிட்டது. மாலிக்கின் வீடும் அவர் பணியாற்றும் பள்ளியும் கடலுண்டி ஆற்றின் இருகரைகளில் உள்ளது. இதன் அருகே பாலங்கள் எதுவும் இல்லை. வீட்டிலிருந்து நேராக யானைக்காயம் பெரிம்பலம் ஆற்றின் கரையோரம் வந்து, அணிந்துள்ள ஆடைகள், டிபன் பாக்ஸ், குடை மற்றும் புத்தகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து இடுப்பில் துண்டால் இறுக்க கட்டிக் கொள்கிறார். இந்த பையையும் செருப்பையும் ஒரு கைய்யால் ஏந்தி, மறுகையால் டயர் டியூபில் நீச்சலடித்து ஆற்றை தாண்டி அக்கரை சென்றடைகிறார். பிறகு ஆடைகளை அணிந்து டியூபை அருகிலுள்ள வீட்டில் வைத்து விட்டு பள்ளிக்கு செல்கிறார். மாலையிலும் இதேபோல் வீடு திரும்புகிறார்.
தற்போதுள்ள கனமழையிலும் மாலிக் இந்த கடின பாதையை வழிதான் பள்ளிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாலிக் கூறுகையில், "இதுவரை எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. வெள்ளம் அதிகரித்துள்ளதால் தற்போது ஆற்றின் தரை மட்டத்தை தொடமுடியவில்லை. நீச்சலடித்து செல்லும்போது ஆற்றின் இடையே உள்ள பாறைகளிலோ, கற்களிலோ நின்று சிறிது நேரம் ஒய்வெடுப்பேன். தற்போது 12 ஆடி உயரத்தில் ஆற்றில் நீர் உள்ளது. கன மழை தொடர்ந்தால் 36 ஆடி உயரத்துக்கு தண்ணீர் பாய்ந்து செல்லும். அப்போதுதூன் ஆற்றைக் கடப்பது சிறிது சிரமமாக இருக்கும்" என கூறுகிறார்.
No comments:
Post a Comment