கூகுள் இணையதளம் நடத்திய, உலக அளவிலான, "அறிவியல் போட்டி 2013" ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், சிதம்பரம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கூகுள் இணையதள நிறுவனம், மாணவர்களிடம், அறிவியல்
படைப்பாற்றலை வளர்க்கும் வகையில், உலக அளவிலான, அறிவியல் போட்டி, 2013 ஐ, நடத்தியது. இதில், மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளை சுருக்கமாக எழுதி, ஆய்வு கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். இதில், 120 நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 1,000க்கும் மேற்பட்டோர், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், 13-14 வயது பிரிவில் பங்கேற்ற, சிதம்பரம் மாணவி சாம்பவி, நுண் கிருமிகளை பயன்படுத்தி, தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் உபகரணத்தை வடிவமைத்து, சிறிய அளவில் மின்சாரம் தயாரித்து, அதன் அடிப்படையில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். இந்த ஆய்வை மேம்படுத்தினால், பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க, சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தொழிற்சாலை கழிவுநீரை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் எனவும், தெரிவித்துள்ளார்.கூகுள் நிறுவனம், 90 பேரின் ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்துள்ளது. இதில், சிதம்பரம் மாணவி சாம்பவியின் கட்டுரையும், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகளில், அமெரிக்காவின் இயற்கை பதிப்புக்குழு, 15 வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது. இதிலும், மாணவி சாம்பவியின் ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில், வெற்றி பெற்றுள்ள, 14 வயதுடைய மாணவி சாம்பவி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த, சம்பத் - முல்லை தம்பதியரின் மகளாவார். இவரது தந்தை, அண்ணாமலை பல்கலையில், பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய், அதே பல்கலையில், பேராசிரியராக பணிபுரிகிறார். சாம்பவி, காஞ்சிபுரம் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
No comments:
Post a Comment