மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் புதிய பள்ளிகள் தொடங்க 68 பேருக்கு தமிழக அரசு தடையில்லா சான்று (என்ஓசி) வழங்கியுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு
அங்கீகாரம் வழங்குவதில் கெடுபிடிகளை காட்டி வருகிறது. அங்கீகாரம் புதுப்பிப்பதிலும் விதிகளை கடுமையாக்கியுள்ளது. இதன் காரணமாக 900 நர்சரி பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. மேலும் இடம் குறைவாக உள்ள மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தயக்கம் காட்டி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இது தொடர்பான கெடுபிடிகள் நீடித்து வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளை நடத்துவோர் அந்த பள்ளிகளை நடத்துவதில் பெரும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இது தவிர புதியதாக பள்ளிகள் தொடங்க விண்ணப்பித்து இருந்தவர்களுக்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கவில்லை. எனவே, தனியார் பள்ளிகளை நடத்துவோர் மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் பள்ளிகளை நடத்த முடிவு செய்தனர். கடந்த ஆண்டு இதற்கான விண்ணப்பங்களை டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ வாரியத்துக்கு அனுப்பினர். சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசு தடையில்லா சான்று கொடுக்க வேண்டும்.அதைப் பெற்ற பிறகே சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்த டெல்லி அலுவலகம் அங்கீகாரம் வழங்கும். இப்படி சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் இயங்க தடையில்லா சான்று கேட்டு தமிழக அரசிடம் 68 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பித்த பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து பள்ளிக் கல்வி இயக்குநர் அந்த பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கியுள்ளார். இந்த பள்ளிகளின் பட்டியல் இந்த வாரம் வெளியாகும் என்று தெரிகிறது. சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் தென்மண்டலத்தில் 664 பள்ளிகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது புதி தாக விண்ணப்பித்துள்ள 68 பள்ளிகளும் தமிழகத்தில் இயங்கிவரும் நர்சரி மெட்ரிக் பள்ளிகள் நடக்கும் வளாகத்திலேயே இயங்கும் என்று தெரிகிறது. இதற்காக அந்த வளாகங்களில் கூடுதலாக கட்டடங்களை கட்டி, அதில் இந்த சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment