Wednesday, 26 June 2013

சாதனை மாணவர்களுக்கு, முதல்வர் இன்று மீண்டும் பரிசு


          பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 211 மாணவர்களுக்கும், இன்று கோட்டையில், முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் பரிசு வழங்குகிறார். பொதுத்
தேர்வுகளில் முதல், மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு, முதல்வர், தன் கையால், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், மூன்று இடங்களை, 13 பேர் பிடித்தனர் என்றாலும், 10ம் வகுப்பு தேர்வில், மூன்று இடங்களையும் பிடித்தவர் எண்ணிக்கை, 198 ஆக உயர்ந்து விட்டது. முதலிடத்தை, ஒன்பது பேர்; இரண்டாம் இடத்தை, 52 பேர்; மூன்றாம் இடத்தை, 137 பேர் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில் சாதித்த, 13 பேர்; 10ம் வகுப்பில், முதலிடம் பிடித்த, ஒன்பது பேர் என, 22 பேருக்கு மட்டும், முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம் 19ம் தேதி, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். பத்தாம் வகுப்பு தேர்வில், இரண்டாம் இடம் பெற்ற, 52 பேர், மூன்றாம் இடம் பெற்ற, 137 பேர் என, 189 பேருக்கு, அதே நாளில், பள்ளி கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், பரிசு வழங்குவார் என, அறிவிக்கப்பட்டது.
                             காலை முதல், மாலை வரை, அமைச்சருக்காக காத்திருந்து, மாணவரும், பெற்றோரும் நொந்து போயினர். மாலை, 5:00 மணி வரை, அமைச்சர் வராததால், பெற்றோர் ஆவேசம் அடைந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், மாணவர்களை, அழைத்துச் செல்ல முயன்றதும், இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவனை வைத்து, சான்றிதழ்களை வழங்கி முடித்தனர். இந்த சொதப்பல் நிகழ்ச்சி குறித்தும், பெற்றோர், மாணவர் அவதி குறித்தும், தினமலர் நாளிதழில், 20ம் தேதி, முதல் பக்கத்தில், விரிவாக செய்தி வெளியானது. இந்நிலையில், 211 மாணவர்களுக்கும், மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில், வரும் 29ம் தேதி விழா நடத்தி, சைவ, அசைவ விருந்துடன், ரொக்கப்பரிசு வழங்கும் விழாவிற்கு, தி.மு.., இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் கையால் பரிசு பெறாத ஏமாற்றம், அமைச்சர் வருவார் என, எதிர்பார்த்து, அங்கே நடந்த குளறுபடி ஆகியவற்றால், பெற்றோரும், மாணவரும், அதிருப்தி அடைந்தனர். இந்த, இரு தகவல்களையும் அறிந்த தமிழக அரசு, 211 மாணவர்களுக்கும், மீண்டும் பரிசு வழங்கும் விழாவை நடத்த உத்தரவிட்டது. இதுகுறித்த செய்தியும், தினமலர் நாளிதழில், கடந்த, 23ம் தேதி, வெளியானது. விழா ஏற்பாட்டில், கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் ஈடுபடுத்தி, மாணவர், சொந்த ஊர்களில் இருந்து, சென்னை வருவது முதல், திரும்பிச் செல்வது வரை, அனைத்து ஏற்பாடுகளையும், பக்காவாக செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.

                          அதன்படி, நேற்று முன்தினம் மாலை முதல், மாணவர்களும், பெற்றோரும், தனியார் சொகுசு பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கோயம்பேடு, சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், தங்க வைக்கப்பட்டனர். சைவ, அசைவ உணவுகளை, தடபுடலாக வழங்கி, அவர்கள் மனம் கோணாமல், கல்வித்துறை அதிகாரிகள் உபசரித்தனர். இன்று காலை, தலைமைச் செயலகத்தில் நடக்கும் விழாவில், 211 மாணவர்களுக்கும், முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு பரிசுகளை வழங்கி, பாராட்ட உள்ளார். 10ம் வகுப்பு மாணவருக்கு, இலவச, "லேப்-டாப்" வழங்குவது கிடையாது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. இன்று சிறப்பு பரிசாக, 10ம் வகுப்பு மாணவர்கள், 198 பேருக்கும், லேப்-டாப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, என்ன பரிசு என்பது, சஸ்பென்ஸ் ஆக உள்ளது. விழா முடிந்ததும், ஓட்டல்களில், மதிய உணவு வழங்கப்படுகிறது. அதன்பின், மாலையில், மாணவர்கள், சொந்த ஊர்களுக்கு, அழைத்துச் செல்லப்படுவர்.

No comments:

Post a Comment