Friday 28 June 2013

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி


              உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து
எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. Franchise முறையில் பல பல்கலைக்கழக பட்டங்களை வழங்குகிறோம் என்று பல்வேறு தனியார் மையங்களின் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய மையங்கள், தாங்களை பல்வேறு பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் என்பதாக கூறிக்கொள்கின்றன. மேலும், தாங்களே, பாடங்கள் கற்பிப்பதிலும், தேர்வுகளை நடத்துவதிலும், அங்கீகரிக்கப்பட்ட மையங்களாக கூறிக்கொள்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவற்றை தனது தொடர்புடைய மையங்களுக்கு வழங்குவதோடு சரி. அத்தகைய மையங்களை கண்காணிப்பதில் பல்கலைக்கழகங்கள், உரிய வரைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இந்நிலையில், இந்தியாவின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவதில், பல்கலைக்கழக மானியக்குழு, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்
*
ஒரு மத்திய அல்லது மாநில பல்கலைக்கழகம், தனது சொந்த துறைகள், அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளின் மூலமாக மட்டுமே, படிப்புகளை நடத்தி, பட்டங்களை வழங்க முடியும்.
*
ஒரு மாநில பல்கலைக்கழகம், தனது செயல்பாட்டு வரம்புக்குட்பட்ட எல்லைக்குள் மட்டுமே செயல்பட முடியும்.
*
தனியார் பல்கலைகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகள் ஆகியவை, தங்களின் படிப்புகளை(Degrees and Diplomas) வழங்குவதற்காக, எந்த கல்லூரியையோ அல்லது கல்வி நிறுவனத்தையோ, இணைத்துக்கொள்ள(affiliation) முடியாது.
*
எந்தவொரு மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலையும், Franchise முறையில், தனியார் கோச்சிங் மையங்களின் மூலமாக, தொலைநிலைக் கல்வி உள்ளிட்ட எந்த படிப்பையும் வழங்க முடியாது.
*
அனைத்துப் பல்கலைகளும், தாங்கள் வழங்கும் பட்டங்களை, UGC நிர்ணயித்துள்ள, அதன் அதிகாரப்பூர்வ Gazette -ல் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில்தான் வழங்க முடியும்.
* M.Phil.,
மற்றும் Ph.D., பட்டப் படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலமாக வழங்கக்கூடாது. இவற்றை எந்தப் பல்கலையானாலும், நேரடி முறையின் மூலம் மட்டுமே வழங்க வேண்டும்.
தனியார் பல்கலைகள் தொடர்பான UGC விதிமுறைகள்
                   
மாநில அரசு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஒரு தனியார் பல்கலைக்கழகம், யூனிட்டரி பல்கலையாக இருக்க வேண்டும். ஒரு தனியார் பல்கலைக்கழகம், தான் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகள் கழித்து, வெளியூர் வளாகங்கள், வெளிநாட்டு வளாகங்கள் மற்றும் ஸ்டடி சென்டர்களை திறக்க, UGC விதிமுறைகளின்(2003) அடிப்படையில் அனுமதி வழங்கப்படலாம். நிகர்நிலைப் பல்கலையைப் பொறுத்தவரை, அது தனது தலைமையிடத்திலேயே இயங்க வேண்டும் அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதர வளாகங்களில் இயங்கலாம். தொலைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, எந்த நிகர்நிலைப் பல்கலையும், எந்த முறையிலும், தொலைநிலைக் கல்வியை வழங்கக்கூடாது. தனியார் பல்கலைகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகள் மற்றும் அவற்றால் வழங்கப்படும் படிப்புகள் ஆகியவற்றின் அங்கீகாரம் குறித்த தகவல்களை JS (CPP-I) UGC, Bahadur Shah Zafar Marg, New Delhi என்ற முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.


மத்திய பல்கலைகள் மற்றும் மாநில அரசு பல்கலைகளின் தொலைநிலைக் கல்வி படிப்புகள் தொடர்புடைய சட்டங்களின் படியும், UGC விதிமுறைகளின் படியும், மேற்கூறிய பல்கலைகள், தங்களின் தொலைநிலைக் கல்வி திட்டங்களை மேற்கொள்ள முடியும். பல்கலைகளின் அங்கீகாரம் மற்றும் அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மற்றும் குறிப்பிட்ட பட்டப் படிப்புகள் ஆகியவை தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.ugc.ac.in என்ற இணையதளம் செல்ல வேண்டும். அங்கீகரிக்கப்படாத ஸ்டடி சென்டர்கள், கேம்பஸிற்கு வெளியேயுள்ள சென்டர்கள், Franchise கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூறிக்கொள்ளும் கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் மாணவர்கள், கட்டாயம் சேர்க்கை பெறக்கூடாது. இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு, தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment