Monday 24 June 2013

அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல்:


                              "ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற
வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது. NET, SLET, TNTET, TNPSC தேர்வுகள், TRB தேர்வு, துறைத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுத அலுவலகத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். உயர்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள நியமன அதிகாரியிடம் அனுமதியும் தடையின்மைச் சான்றும் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேறு பணிக்காகத் தெரிவு செய்யப்படும் நேர்வில், தற்போதுள்ள பணியிலிருந்து விடுவிப்புப் பெறவும் முந்தைய பணிக்காலத்தைப் புதிய பணிக்காலத்துடன் சேர்த்துக் கொள்ளவும் சிக்கல் ஏற்படாமல் சுலபமாக அமையும்.
தொடக்கக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.
நியமன அலுவலர்- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
துறைத் தலைவர்- இயக்குநர்.
பள்ளிக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- தலைமையாசிரியர்.
நியமன அலுவலர்- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
துறைத் தலைவர்- இயக்குநர்.
குறிப்பு:

               ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு நியமனம் மூலம் செல்கையில் முந்தைய பணிக்காலம் மட்டுமே இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றின் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். முந்தைய சம்பளம் எந்த விதத்திலும் கருதப்படமாட்டா. அதாவது புதிய பணியில் நுழைவுநிலை ஊதியம் மட்டுமே வழங்கப்படும். ஊக்க ஊதிய உயர்வுக்குத் தகுதி இருப்பின் பெறலாம். ஒத்த பணியெனில் தேர்வுநிலை, சிறப்புநிலைக்குத் தகுதியுள்ள முந்தைய பணிக்காலம் எடுத்துக் கொள்ளப்படும். பழைய பணியிலிருந்து விடுவிப்பானவுடன் மீள்உரிமை துண்டிக்கப்படும். அதாவது ஒருவேளை புதிய பணியைத் தொடர்ச்சியாகச் செய்ய இயலாத நேர்வில் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பழைய பணிக்கு வந்து சேர எவ்வித வாய்ப்பும் வழங்கப்படாது. மீண்டும் போட்டித் தேர்வில் தேர்ச்சி அல்லது வேலைவாய்ப்பகப் பதிவு சீனியாரிட்டிப்படி தான் நியமனம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

No comments:

Post a Comment