Sunday 16 June 2013

மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறதா தேர்வுத்துறை? நாளிதழ் செய்தி


             நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், குளறுபடிக்கு மேல் குளறுபடி நடந்துள்ளது. வினாத் தாள்களில் கேள்விக்கு ஏற்றாற்போல் விடையளிக்க இணைப்புகள் இல்லை. விடைத் தாள்களை தேர்வு மையத்திலிருந்து, திருத்தும் மையங்களுக்கு
அனுப்பியபோது காணாமல் போனது, சேதமடைந்தது என, பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பல பாடங்களில் மதிப்பெண் குறைவாக இருந்ததால், மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் விடைத் தாள்களும், மறு மதிப்பீடு செய்து மதிப்பெண்களை குறைத்து விட்டனர் என, மாணவர்களும், பெற்றோரும், பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டனர். மறு மதிப்பீட்டால், பொறியியல், மருத்துவ கல்விக்கான "கட்-ஆப்" மதிப்பெண் குறைந்து, மாணவர்களின் எதிர்காலம் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம், யார் காரணம். குளறுபடிக்கு தீர்வுகள் என்ன என்பது பற்றி கல்வியாளர்களின் கருத்துக்கள் இதோ:
                           
தமிழ்குமரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர், முதுநிலை கணித பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்: மறுமதிப்பீட்டில் நடந்துள்ள குளறுபடிகளுக்கு, ஆசிரியர்கள் காரணமல்ல. கல்வித் துறை தான் காரணம். மறுமதிப்பீடு கேட்காத மாணவர்களுக்கும் மறுமதிப்பீடு செய்து, மதிப்பெண்களை குறைத்துவிட்டனர். இதனால், மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்கள் குறைந்து, மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு, அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக, விடைத் தாள்களை திருத்துவதற்கான பொது விடையை அடிப்படையாகக் கொண்டு தான், மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்குகின்றனர். பல நேரங்களில், பொது விடையில் அடங்காத கூடுதல் விடைகளையும் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் எழுதிய சரியான கூடுதல் விடைகளுக்கும், மதிப்பெண் அளிக்கப்படும். ஒரு விடையில் சரியான மற்றும் தவறான விடைகளை இணைத்தும் மாணவர்கள் எழுதுகின்றனர். அதற்கேற்பவும் மதிப்பெண்களை அளிக்கிறோம்.
                      
முதல் முறை திருத்தும் போது, சரியாக திருத்தாததால் தான், மறுமதிப்பீடு செய்ய கோருகின்றனர் என்ற கருத்தை ஏற்க முடியாது. ஒரு விடைத் தாளை திருத்தும் போதும், விடையளிக்கும் முறையில், மாணவன் கையாளும் அணுகு முறைக்கு ஏற்பவும், மதிப்பெண் அளிக்கப்படுகிறது. மறுமதிப்பீடு என்று வரும் போது, ஏதோ தவறு செய்து விட்டனர். அதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் திருத்தி, மதிப்பெண்களை அளிக்கின்றனர். இதனால், மதிப்பெண் வித்தியாசப்படுகிறது. மறுமதிப்பீடு என்பது மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதில், பலனடைந்த மாணவர்கள் அதிகம். ஆனால், மறுமதிப்பீடு கேட்காதவர்களுக்கும், மறுமதிப்பீடு செய்ததால் தான், தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
                          
பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலர், பொது பள்ளிக்கான மாநில மேடை: மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வித் துறை, வேகத்தை கைவிட்டு, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தேர்வு நடத்துதல், விடைத் தாள்களை திருத்துதல் என, அனைத்துக்கும் குறுகிய காலக்கெடுவை நிர்ணயித்து, அதற்குள் பல லட்சம் மாணவர்களுக்கு, தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என செயல்படுவதால், பல கட்டங்களில் தவறுகள் நடக்கின்றன. விடைத்தாள் திருத்தும் பணிக்கும், மிகக் குறுகிய காலத்தை நிர்ணயித்து செயல்படுகின்றனர். குறிப்பாக, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அடிப்படையான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வு தாள்களை திருத்த, ஆசியர்களுக்கு குறுகிய காலக்கெடுவை நிர்ணயிக்கின்றனர். இதனால், ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வு தாள்களை திருத்தி மதிப்பிடுவதில் பிழைகள் நிகழ்கின்றன. ஆசிரியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், விடைத் தாள் திருத்த, கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதோடு, விடைத் தாள் திருத்தும் மையங்களையும் அதிகரிக்க வேண்டும்.
               
ஒரு மையத்தில் விடைத் தாள் திருத்தப்பட்டதும், அதை சரிபார்க்க மற்றொரு மதிப்பீட்டையும் உடனே செய்ய வேண்டும். இந்த இரட்டை மதிப்பீடு முறை, மதிப்பெண் வித்தியாசத்தை, தேர்வு முடிவுகள் வெளியிடும் முன்னரே நீக்கும். விடைத் தாள் திருத்தும் ஆசிரியர்களின் நிலை குறித்து, ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து, அவர்கள் மத்தியில் நிலவும் குறைகளை போக்க வேண்டும். இதற்கு, பள்ளி தேர்வுத் துறையில், ஆராய்ச்சிப் பிரிவை துவங்க வேண்டும். பள்ளி படிப்பே மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதால், பள்ளி பொதுத் தேர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                
ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத் தாள்களைத் திருத்த, தயார் செய்யப்படும் பொது விடைகளை, குழு அமைத்து உருவாக்க வேண்டும். விடைத்தாள்களை முதல் முறை திருத்தும் போதே, கறாராக திருத்த வேண்டும். அப்போது தான் மறு மதிப்பீட்டின் போது சிக்கல் ஏற்படாது. ஒரு வினாவுக்கு அளித்த பதிலுக்கு, கூடுதல் மதிப்பெண்ணும், மற்றொரு வினாவுக்கான பதிலுக்கு குறைவான மதிப்பெண்ணும் அளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், குறைந்த மதிப்பெண்ணை சுட்டிக்காட்டி, மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். மாணவர்களின் எண்ணமெல்லாம், தான் சுட்டிக்காட்டிய வினாவுக்கு மட்டும், மறு மதிப்பீடு செய்யப்படும் என, நினைக்கின்றனர். ஆனால், மறு மதிப்பீடு கோரும் மாணவர்களின், விடைத் தாள் முழுவதும் மறு மதிப்பீடு செய்யப்படும்.
                   
அப்போது, கூடுதலாக மதிப்பெண் அளித்த விடைகளுக்கும் மதிப்பெண் குறைக்கப்படும். இந்நிலையில், மாணவர்கள் எதிர்பார்க்கும், மதிப்பெண் மறு மதிப்பீட்டில் கிடைக்காது. குறிப்பாக, மறு மதிப்பீட்டுக்கு வாய்ப்பு அளிக்காமல், முதல் முறை திருத்தும் போதே, கறாராக திருத்த வேண்டும். ஏனெனில், மருத்துவப் படிப்பில், 0.25 சதவீத மதிப்பெண்ணில் கூட, ஒரு மாணவனின் எதிர்காலம் மாறும். எனவே, பொதுத் தேர்வு வினாத் தாள், தேர்ச்சி பெறுவதற்கு எளிதாகவும், 100 மதிப்பெண்கள் எடுப்பதற்கு கடினமாகவும் இருக்க வேண்டும். மேலும், மறு மதிப்பீடு கோரும் மாணவர்கள் மிக சொற்பமானவர்கள் தான். எனவே, மறுமதிப்பீடு செய்த விடைத்தாளை, உடனடியாக, இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அப்போது தான், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தெளிவான விடை கிடைக்கும். கல்வித் துறை இத்திட்டத்தை விரைவில் அமல் செய்யவேண்டும்.
                   
பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலை: விடைத்தாளை முதலில் திருத்தியதற்கும், மறுமுறை மதிப்பீடு செய்வதற்கும் மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசம் வந்தால், அது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், வித்தியாசம் அதிகரிக்கும் போதே பிரச்னை எழுகிறது. பல்கலைக்கழகத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் போதும் சரி, பிளஸ் 2 போன்ற பள்ளி பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும்போதும் சரி, கவனக் குறைவாக விடைத் தாள்களை திருத்துவதாக, ஆசிரியர்கள் மீது, பல ஆண்டுகளாக புகார் வந்த வண்ணம் உள்ளது. நாளொன்றுக்கு 25 முதல் 40 விடைத் தாள்களை திருத்த வேண்டும். காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை விடைத் தாள்களை திருத்தலாம். காலையில் திருத்தும் பணியைத் துவங்கிய சில மணித் துளிகளில், அன்றைய தினத்துக்கு ஒதுக்கப்பட்ட விடைத்தாள்களை, ஆசிரியர்கள் திருத்தி முடித்து விடுகின்றனர். இதன்பின், மாலை வரை அவர்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பர். அவசர கதியில், ஏதோ திருத்துகிறோம், அதற்கு காசு வருகிறது என, விடைத் தாள்களை ஆசிரியர்கள் திருத்துவதால் தான், இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன், முழுமையாகப் படித்து, விடைத் தாள்களை திருத்தினால், மறு மதிப்பீட்டுக்கு வாய்ப்பு இருக்காது.
                                
மேலும், முதல் முறையாக விடைத் தாள் திருத்துவதற்கு வழங்கப்படும் "கீ" என்று அழைக்கப்படும், விடைகள் தான், மறு மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இரு மதிப்பீடுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகள் வருவது என்பது, விடைத் தாள் திருத்தும் பணியை, கவனக் குறைவாக ஆசிரியர்கள் மேற்கொள்வதே காரணம். எனவே, விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் முறையாக செய்ய வேண்டும்
.

No comments:

Post a Comment