Friday 7 June 2013

கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - சிறப்பு கட்டுரை


(இக்கட்டுரை எந்த காரணம் கொண்டும் தனியார் பள்ளியை குறை கூறுவதாக அமையாமல், அரசு பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளும், அவர்கள் சந்திக்கும் சவால்களும், அவர்களின் நிறை குறைகளை உலகிற்கு படம் பிடித்து
காட்டும் வகையில் மட்டுமே அமைந்து உள்ளது.)
அரசு பள்ளி மாணவர்களின் சூழ்நிலை:
             மாணவ, மாணவிகள் படிப்பதற்கு எந்நேரமும் உகந்ததாக இல்லாத சூழ்நிலை அரசுப்பள்ளியையும், ஆசிரியர்களையும் மட்டுமே முழுமையாக நம்பும் பெற்றோர், தேவையான நோட்டு புத்தகங்களை வாங்கி தர இயலாத ஏழ்மையான பெற்றோர்.

கல்வியறிவு இல்லாத பெற்றோர்:
        ஒரு வகுப்பில் உள்ள அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகள் (ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக). பல ஆண்டுகளாக ஆசிரியர் இன்றி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள். பள்ளியில் சேர எப்பொழுது வந்தாலும், அவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களை வரவேற்று சேர்த்துக் கொண்டு, எவ்வளவு குறுகிய காலமானாலும், அவர்களுக்கு தேவையானதைக் கற்பித்து, அவர்களையும் தேர்ச்சி பெற உழைக்கும் ஆசிரியர்கள்.
                         
கற்றலில் பின் தங்கியவர்களை அதிகமாகக் கொண்ட பள்ளிகள்.கற்றலில் பின் தங்கியவர்களையும், பள்ளியை விட்டு இடையில் நின்றவர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடுபவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள். தவறு செய்யும் மாணவ, மாணவிகளையோ, பள்ளிக்கு அடிக்கடி வராத மாணவ, மாணவிகளையோ, ஒழுங்காகப் படிக்காத மாணவ, மாணவிகளையோ எதுவும் கண்டித்து கேட்கக் கூட உரிமை இல்லாதவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
            அத்தகைய மாணவ, மாணவிகளைப் பக்குவமாக அரவணைத்து, கடினமான சூழ்நிலையையும் எளிமையாகக் கையாண்டு அவர்கள் வெற்றிக்கு அயராது உழைக்கும் ஆசிரியர்கள்.
 
குறைவான தேர்ச்சி:
                          பெரும்பாலான மாணவ, மாணவிகளை, அவர்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரிகளாக்க அசராது பாடுபடும் ஆசிரியர்கள். மாணவ, மாணவியர் வீட்டுக்கு வந்ததும், பள்ளியில் படித்தது போதும், இருக்கிற வேலையைப் பார் எனக் கூறும் பெற்றோர். தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் திருமண உதவி திட்டத்தில் பயன்பெற அவர்களைத் தயார்படுத்துதல். மனப்பாடம் செய்து படிக்காமல், புரிந்துகொண்டு படிக்கும் முறையில் கல்வி கற்பித்தல்.
எல்லா வகையிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறவும், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் அடிப்படைகளை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அந்தந்த வகுப்புப் பாடங்களை, அந்தந்த வருடத்தில் நடத்துதல்.
             மாணவ, மாணவிகள் நலனுக்காக, ஏற்கெனவே உள்ள பணிச்சுமையைக் கருத்தில் கொள்ளாமல், ஆசிரியர் இல்லாத பாடத்தையும், அவர்களுக்குப் புரியும் வகையில் கற்பிக்கும் தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும், வழிகாட்டுதல்கள் வழங்கும் தன்னலமற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளி மாணவர்களின் வறுமை நிலை :-படிக்க ஆசை இருந்தும், பள்ளியை விட்டு வீட்டுக்குச் சென்றவுடன், தம்பி தங்கைகளுக்கு இரண்டாவது தாயாகவும், சமையல் உதவியாளராகவும், பெரும்பான்மை கிராம வீடுகளில் சமையலராகவும் அவதாரமெடுக்கும் மாணவிகள்; சம்பளமில்லா பணியாளாராகவும், பொருளீட்டும் வேலைக்காரராகவும் மாறும் மாணவர்கள், படிப்பதற்கு உகந்ததாக இல்லாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பணி செய்ய வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மாணவர்களின் பாழாய் போன கிரிக்கெட் ஆடும் ஆசைக்கு பலியாகும் மாணவர்கள், குடும்ப வருவாயைப் பெருக்க ஓரளவு வேலை செய்யும் பெண்கள் களைப்பை (!!!!!!!!!!!!!!!!!) மறைக்க தொ(ல்)லைகாட்சி பார்க்கும் ஆசைக்கு பலியாகும் மாணவிகள்.
                        
சுயநல ஆசை மற்றும் பிரச்சனைகளால் பிரிந்த பெற்றோரின் அக்கறையின்மை காரணமாக, தாத்தா, பாட்டி, உறவினர் வீட்டிலேயோ, அல்லது பிரிந்த பெற்றோரின் ஊர்களுக்கு மாறி, மாறி படிக்க வேண்டிய சூழலில் உள்ள மாணவ, மாணவிகள். செய்யாத வீட்டுப்பாடங்கள், குறு, சிறு தேர்வுகளுக்கு படிக்காமை, 2 அல்லது 3 கி.மீ. நடந்து சென்று பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்ற நினைப்பு தரும் களைப்பு, காலையில் வீட்டில் / நிலத்தில் செய்த வேலை தந்த அசதி, வீட்டில் நேற்று நடந்த பெற்றோரின் சண்டை தரும் மன உளைச்சல், ஏழ்மை தரும் அயர்ச்சி, தொலைக்காட்சியில் பார்த்த, கனவிலும் எட்டாத செல்வச் செழிப்பு, அத்தகைய உயர்வுக்கு நம்மால் செல்ல முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை போன்ற பலவித மனப்போராட்டங்களுக்கிடையே பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையானவற்றை, அவர்கள் விரும்பும் வகையில், அவர்களுக்குப் புரியும் வகையில் கற்பித்து, அவர்களையும் பள்ளி இறுதித்தேர்வுகளில் வெற்றியடையச் செய்யும் பள்ளிகளையும், ஆசிரியர்களையும், வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.
                             
ஒரு சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால், ஒட்டு மொத்த அரசுப் பள்ளிகளை செய்தித்தாள்களின் விலாசல்களாலும், கல்வியாளர்களாக காட்டிக்கொள்ள விரும்பும் சிலரின் விமர்சனங்களாலும், அடிப்படை சூழ்நிலைகளைப் புரிந்தும் அதைக் காட்டிக்கொள்ளாமல் செய்யும் சிலரின் வாதங்களாலும், எதையும் எளிதில் நம்பிவிடும் பொதுமக்களின் தூற்றுதல்களாலும் எல்லா வகையிலும், எல்லோராலும் புண்படுத்தப்பட்டும், கையறு நிலையிலும், எதைப் பற்றியும் கவலைப் படாமல், ”போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கே!” என முகம் தெரியாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.
                          
ஏழை மாணவ, மாணவிகளுக்கு, பிரதிபலன் எதிர்பாராமல் பொருளுதவி நல்கியும், ஊக்குவித்தும், நல்வழி காட்டி, அவர்களின் முன்னேற்றத்திற்காகவேமெழுகுவர்த்தி போல்அயராது பாடுபடும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம். வசதியின்றி, வாய்ப்பின்றி, வழி தெரியாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையானதைக் கொடுத்து அவர்களையும் வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம். போக்குவரத்து இல்லாத கிராமத்திலுள்ள பள்ளிகளில் பணி புரிந்து, நகர்ப்புறம் பற்றி அறியாத மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களையும் வாழ்வில் முன்னேற்றி, வெற்றி பெற வழிகாட்டும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம்.
                     
சுற்றுச்சுவர் இல்லாத, கேட் போடப்படாத, கேட் இருந்தாலும் எப்போதுமே திறந்திருக்கும் பள்ளிகளில், படிப்பறிவு இல்லாத பெற்றோரின் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, நவீன இந்தியாவை, வலிமையான இந்தியாவை, பெருமைமிகு இந்தியாவை உருவாக்கக் காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கல்வியையும், ஊக்கத்தையும், வழிகாட்டுதல்களையும், அன்பையும், அரவணைப்பையும் வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறோம். இவ்வாறு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் கூட முழு நேர சிறப்பு வகுப்பு நடத்தி பல அரசு பள்ளி ஆசிரியர்கள் தன்னலமின்றி உழைக்கிறார்கள்.
                      
திரவ பொருளான பாலையும், திட பொருளான பழத்தையும் எவ்வாறு ஒரு தராசில் வைத்து அளவிட முடியாதோ அதே போன்று இரு வேறு சூழ்நிலைகளில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும் ஒரு தராசில் வைத்து மதிப்பீடு செய்யாதீர்கள். இருவருமே அவரவர் மாணவர் சூழ்நிலைக்கேற்ப கற்பித்தல் எனும் உன்னத சேவையில் ஈடுபடுகிறோம்.

நன்றி : வினோத் குமார்

No comments:

Post a Comment