Monday 10 June 2013

சறுக்கலா?சாதனையா? சமச்சீர் கல்விதரத்தை எதிரொலித்த தேர்வு முடிவு_ கேள்விக்குரியாகிரதா மாணவர் எதிகாலம்


                          பாடச்சுமை குறைப்பு, அனைவருக்கும் சமமான கல்வி என்ற நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தால், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; கல்வித்தரத்தின் குறைபாட்டையே இது எதிரொலித்துள்ளது. கடந்த
தி.மு.., ஆட்சியில், தமிழகத்தில் சமச்சீர் பள்ளிக்கல்விமுறை சட்டம் கொண்டு வரப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற .தி.மு.., அரசு, "சமச்சீர் பாடத்திட்டம் தரமானது இல்லை' என்று கூறி, மறு ஆய்வுக்கு பின்பு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை கடந்து 2011 ஆகஸ்ட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக, தமிழகத்தில் செயல்பட்டு வந்த நான்கு வகை கல்வி முறைகளும் சமச்சீர் கல்வி என்ற ஒரே முறையின் கீழ் கொண்டு வரப்பட்டன.ஒரு வகையில் இவ்வாறு ஒருங்கிணைத்தது வரவேற்கத்தகுந்தது என்றாலும், சமச்சீர் கல்வியில், முந்தைய கல்வி முறைகளுக்கு இணையான தரம் உள்ளதா என்ற கேள்வி, அப்போதே எழுந்தது. பாடப்புத்தகங்கள் தரப்பட்ட போது, இந்த சந்தேகம் உறுதியாகி, தமிழக மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டும் வலுத்தது. மனப்பாடம் செய்யும் திறனை ஊக்குவிக்கும் வகையிலே, சமச்சீர் பாடத்திட்டமும், தேர்வுமுறையும் அமைந்துள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், வேறு வழியின்றி, அதே பாடத்திட்டத்தையே கடை பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
                         சமீபத்தில் வெளியான எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், அன்று எழுந்த சந்தேகத்தையும், குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்துவதாகவுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் 9 பேர் முதலிடமும், 52 பேர் இரண்டாமிடமும், 137 பேர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். பாடங்கள் வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 3 அல்லது 4 மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இது பள்ளிக்கல்வித்துறை சரியான போக்கில் தான் செல்கின்றதா என்ற அச்சத்தை எல்லோரிடத்திலும் எழுப்பியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வர வேண்டுமென்ற நோக்கில், சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்தாலும், அதற்கான தேர்விலும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளதையும் தேர்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதே போக்கில் சென்றால், எதிர்காலத்தில் தேசிய அளவிலான எந்த விதமான தேர்வுகளிலும், தமிழக மாணவர்களால் வெற்றி பெறவே முடியாமல், அதன் தொடர்ச்சியாக தமிழகமே பின் தங்கிவிடும் அபாயம் உள்ளதாக பல தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர்.
                         இதுகுறித்து, கல்வியாளர்கள், மெட்ரிக் சங்க நிர்வாகிகளின் கருத்துக்கள்:
                        பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொது பள்ளிகளுக்கான மாநில மேடை, பொது செயலாளர் மற்றும் கல்வியாளர்பாடத்திட்டம்கல்வி முறை, பாடநூல் பங்களிப்பு அனைத்தும் ஒன்றல்ல, இதனை புரிந்து கொள்ளாதவர்கள் சமச்சீர் பாடத்திட்டத்தை தரமற்றது என்கின்றனர். முத்துகுமரன் தலைமையிலான குழு பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டும், சி.பி.எஸ்.., உட்பட அனைத்து பாடமுறைகளை ஆய்வு செய்து, பலதரப்பு விவாதங்கள் மேற்கொண்டு பின்பு இப்பாடத்திட்டத்தினை வடிவமைத்துள்ளது. பாடத்திட்டத்தின் தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லை. தேர்வுக்கான கேள்விகளில், புத்தகங்களில் இருந்த பயிற்சி வினாக்களே அதிகம் இடம் பெற்றதே மாணவர்கள் மதிப்பெண்கள் அதிகம் பெற்றதற்குக் காரணம்.
                        கிருஷ்ணராஜ், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நல சங்கத்தின் மாநில பொது செயலாளர்எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், சமச்சீர் கல்வியின் தரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டது. சாதாரண மாணவர்களை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில், எல்லா மாணவர்களையும் சோம்பேறிகளாக இம்முறை மாற்றிவருகிறது. மெட்ரிக் பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது சமச்சீர் பாடத்திட்டம் தரம் மிகமிகக் குறைவு. அதனால்தான், பெரும்பான்மை மாணவர்களால், 400 மற்றும் 450க்கு அதிகமாக மதிப்பெண் பெற முடிந்துள்ளது; இந்த தேர்வில், 450க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள், உயர்கல்வியின் போது அடையாளமின்றி காணாமல் போவார்கள். எளிமையாக்கியுள்ளோம் என்ற பெயரில் கல்வியின் தரத்தை சிதைத்துள்ளனர் என்பதே உண்மை.
                         விசாலாட்சி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநிலத்தலைவர்மெட்ரிக் பள்ளிபாடத்திட்டங்களை ஒப்பிடும் போது, சமச்சீர் கல்வி பாடமுறை சொல்லும் படியாக இல்லை, குறிப்பாக, அறிவியல், கணிதம் பாடங்களில், செயல்முறை கல்வி பெயரளவில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு நல்ல மனப்பாடம் செய்யும் திறமை உள்ளதை தவிர, பிற திறமைகளை சொல்லும்படி வெளிப்பட வாய்ப்பில்லை. புரிந்து படித்து சிந்தித்து செயல்படும் மாணவர்களின் எதிர்காலம் தான் சிறப்பாக அமையும்.ஆனால், இங்கு மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுபவர்களும், அதனை ஊக்குவிப்பவர்களும்தான் அதிகம். மாணவர்களின் எதிர்காலத்தை கருதி சமச்சீர் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். இதுபோன்ற, தேர்வுகள் கண் துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. மனப்பாடம் செய்யும் திறனை மட்டும் சோதிக்க பொதுத்தேர்வு அவசியம் இல்லை.
                              சத்ய நாராயணன், கோவை, பள்ளி தலைமை ஆசிரியர்தேர்வு முடிவுகளை மதிப்பீடு செய்யும் முறைகளை கட்டாயம் மாற்றவேண்டியது அவசியம். சமச்சீர் பாடத்திட்டம் நல்ல தரத்துடன் உள்ளது. இருப்பினும், தேர்வு முறை, கேள்விகள் கேட்கப்படும் முறைகளினால் மாணவர்களின் சுய யோசனை திறன் மேம்படாமல் உள்ளது. தேர்வுகளில் சிந்தித்து தீர்வு காணும் வகையில் கேள்விகள் கேட்கப்படவேண்டும்.இவ்வாறு பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்திறன், போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சமச்சீர்கல்வி என்ற பெயரில் கல்வியை எளிமையாக்கி அதன் தரம் சிதைக்கப்படுவதால், மாநில அளவில் தரம், தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமே தவிர மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல் முழுமையாக மங்கிவிடும். எந்தவித நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ள இயலாத நிலையில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவது நிச்சயம். சமச்சீர் பாடத்திட்டத்தையும், தேர்வு முறையிலும் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருக்கிறது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை
                             சுப்பிரமணியம்,மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் கல்வியாளர், சென்னை.:12வது ஐந்தாவது திட்டத்தில் மாணவர்களின் உயர்கல்வியில் சேர்க்கைப் பதிவை அதிகரித்து காண்பிக்கவேண்டுமென்ற நோக்கில் கல்வியின் தரம் குறைந்து வருவதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.பொதுத்தேர்வில், மாநில அளவில் தரம் பெறும் மாணவர்கள் கல்லூரிகளின் முதல் பருவத்தில் "அரியர்ஸ்' வைத்து திணறுவது ஏன் என்று நாம் சிந்திப்பதில்லை. இதே நிலை தொடரும் பட்சத்தில், 2022ல் சுமார் 5 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் தகுதியின்றி இருப்பார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் திறனை மேம்படுத்தும் விதத்தில் தரமுடன் இல்லை. இம்முறை தொடரும் பட்சத்தில், தேசிய அளவிலான தேர்வுகளில், பிறமாநில மாணவர்களுடன் தமிழக மாணவர்களால் போட்டியிட இயலாத நிலையே ஏற்படும். மாணவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தி, அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டம், தேர்வு முறைகளை மாற்றுவது அவசியம்.
                         ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்:சமச்சீர் பாடத்திட்டத்தில் தரம் குறைவு என்று சொல்ல முடியாது; ஆனால், தேர்வுமுறைகளும், கற்பித்தல் முறையும் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லை என்பதே உண்மை. ஆழமான கருத்துக்களை மாணவர்களிடம் பதிவு செய்து, சிந்திக்கும் தன்மையை தூண்டும் விதமாக இருப்பது அவசியம். பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு வேண்டுமானால் கேள்வித்தாள் எளிமையாக இருக்கலாம். ஆனால், 100க்கு 100 மதிப்பெண்களை எடுப்பது என்பது இயலாத காரியமாக இருக்கவேண்டும். திறமையும், தகுதியும் உள்ள மாணவர்கள் மட்டுமே முழுமதிப்பெண்களை பெறும் அளவிற்கு கேள்விகள் அமைந்து இருக்கவேண்டும். தேர்வு முறையை கடினப்படுத்தும் பட்சத்தில் தான் திறமையான மாணவர்களை அடையாளம் காணமுடியும். மாணவர்கள் மத்தியில் தேர்வு என்றால் ஒன்றும் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கி வருகிறோம். கணிதம், அறிவியல் பாடங்களில் மட்டும் முழுமதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் தவறில்லை; எல்லோருமே 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம்.
நிஜமான வெற்றியா?

                இந்த ஆண்டில், பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர்; அவர்களில், 9 லட்சத்து 35 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 522 பேர், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment