Wednesday 19 June 2013

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு இடங்கள்- முடிவை நிறுத்திவைக்க உத்தரவு



              அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில், விளையாட்டு ஒதுக்கீடு இடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட முடிவை தாற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர்
நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டில் தனது பெயர் பரிசீலிக்கப்படாததை எதிர்த்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுதூரைச் சேர்ந்த மாணவி எஸ்.சரண்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அவரது மனு விவரம்:

               இந்திய எறிபந்து சம்மேளனம் நடத்திய பல்வேறு தேசிய அளவிலான எறிபந்து போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளேன். இந்திய எறிபந்து சம்மேளனம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி, வெற்றிகளின் அடிப்படையில் விளையாட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில் 730 மதிப்பெண்கள் பெறத் தகுதி பெற்றிருக்கிறேன். இதன்படி, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் இடம் கோரி விண்ணப்பம் சமர்ப்பித்தேன். ஜூன் 7-ஆம் தேதி அண்ணா பல்கலைகழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு கோரியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றபோது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் எறிபந்து விளையாட்டு அங்கீகரிக்கப்படவில்லை எனத் தெரிவித்து விட்டனர்.
                      
ஆனால், அண்ணா பல்கலைகழகம் விண்ணப்பத்துடன் வழங்கிய விவரக் கையேட்டில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான விளையாட்டுகளில் எறிபந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்திய எறிபந்து சம்மேளனம், மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியுள்ள அங்கீகாரச் சான்றிதழை கலந்தாய்வின்போது சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மணிக்குமார், மனுதாரரை விளையாட்டு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவு விவரம்:

           பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் மனுதாரர் இணைத்துள்ள சான்றிதழ்களுக்கான மதிப்பெண்கள் அடிப்படையில் அவரை விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அதேநேரம், ஏற்கெனவே விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு கலந்தாய்வு முடிந்திருக்கும்பட்சத்தில், மனுதாரருக்கான விரும்பும் கல்லூரி அல்லது பாடப் பிரிவை இழக்க நேரிடும். ஆகவே, விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான முடிவு வெளியிடுவதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்
.

No comments:

Post a Comment