Tuesday 11 June 2013

"ஆல் பாஸ்' திட்டத்தை நிறுத்துங்கள்!



                      அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித் துறை செயலரே, களத்தில் இறங்கி, தலைமை ஆசிரியர்களுக்கு, "டோஸ்' விட்டு, யோசனையும் சொல்வது சரியல்ல. ஏனெனில், அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்,
அதிகாரிகளின் அலட்சியங்கள், கட்டட பராமரிப்புகள் குறைவு,கழிவறை சுகாதார பராமரிப்பு கேவலம் என்றளவில் தான், பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, அரசு அறிவிக்கும் திட்டங்களை சுமக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. ஆசிரியர் நல சங்கங்களில், கீழ்நிலை ஆசிரியர்களின் பங்கெடுப்பு அதிகமாக உள்ளதால், தலைமையாசிரியரின் கண்டிப்பை மீறி செயல்படும் சூழலும் உள்ளது. இதனால், தலைமையாசிரியரின் பாடு, மத்தளமாகி விடுகிறது. இலவச சைக்கிள் வினியோகத்தில், அந்த சைக்கிள்களை (உதிரி பாகங்களாக பள்ளிகளுக்கு வருவதால்) பாதுகாத்து பராமரிக்க வேண்டிய நிலைமை, அதற்கான இடம் பாதுகாப்பான நிலையில் இல்லையென்றால், அதற்கு முழு பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும். இலவச மதிய உணவுசரிவர மளிகை பொருட்கள் வருகிறதா, அதன் அமைப்பாளர் சரிவர செயல்படுத்துகின்றனரா, மதிய உணவில் எந்தவித கலப்படமும் (கரப்பான் பூசி, பல்லிகள், ஈக்கள் விழாமல் தடுப்பது) இல்லாமல் பாதுகாத்து, சமைத்தவுடன் ருசி பார்க்க வேண்டியது, தேர்தல் வேலைகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற பல பணிகள் உள்ளன. அதோடு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை, 8ம் வகுப்பு வரை, "பெயில்' ஆக்க முடியாது. 8ம் வகுப்பு வரை, சரியாக படிக்காமல், ஒன்றும் தெரியாமல் இருக்கும் ஒரு மாணவன், எப்படி, 9ம் வகுப்பிலும், 10ம் வகுப்பிலும் நன்கு மதிப்பெண் பெற முடியும்? எனவே, முதலில், இப்படி, 8ம் வகுப்பு வரை, "ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்குள்ள, தேவையற்ற சுமைகளை குறைக்க, அரசு கல்வித் துறை முன் வர வேண்டும். இப்படி, சில முயற்சிகளை அரசு கல்வித் துறையினர் எடுத்தால், நல்ல தேர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment