Sunday 9 June 2013

திருவள்ளுவர் பல்கலையில் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல்



             விடைத்தாள் திருத்துவதற்கு, தொகையை உயர்த்த மறுப்பதால், திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவு வெளியிடுவதில், தாமதம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர், திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில், 110 கலைக்
கல்லூரிகள் உள்ளன. 1,50,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த ஏப்ரலில், தேர்வு நடந்தது. தேர்வு முடிவை, வரும் 30ம் தேதிக்குள் வெளியிடஏற்பாடு நடந்தது. வேலூர் முத்துரங்கம் கல்லூரி, திருவண்ணாமலை அரசு கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரி, கடலூர் பெரியார் கலைக்கல்லூரிகளில், விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இளங்கலை பாடத்துக்கான விடைத்தாள்களை திருத்த பேராசிரியர்களுக்கு ஒரு பக்கத்துக்கு, ஒன்பது ரூபாயும், முதுகலை பாடத்துக்கு, 12 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
                               
இதை உயர்த்தி, இளங்கலைக்கு, 12 ரூபாயும், முதுகலைக்கு, 15 ரூபாய் வழங்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பல்கலை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால், கடந்த ஜனவரி, 30ம் தேதி மேல் முறையீட்டு மனுவை, பல்கலை ஒருங்கிணைப்புக் குழுவில் பேராசிரியர்கள் கொடுத்தனர். ஒருங்கிணைப்புக் குழு வைத்த கோரிக்கைகளை, அரசுடன் பேசி, முடிவு செய்வதாக, பல்கலை உறுதி அளித்தது. ஆனால், பேச்சு நடத்தவில்லை. கட்டண உயர்வையும் அமல்படுத்தவில்லை. இதனால், விடைத்தாள்களை, இனி திருத்தப் போவதில்லை என, ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. இதனால், வரும், 30ம் தேதிக்குள், தேர்வு முடிவை வெளியிடுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment