Friday 14 June 2013

மறுமதிப்பீடு: முக்கிய பாடங்களில் 10 மதிப்பெண் வரை குறைந்தது - dinamani


             பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு 10 மதிப்பெண் வரை குறைந்தது. இதனால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களும், பெற்றோர்களும்
அதிர்ச்சியடைந்துள்ளனர். மறுமதிப்பீட்டுக்கான கட்டணம் செலுத்தாமலேயே தங்களது விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள், பெற்றோர்கள் சென்னையில் உள்ள மறுமதிப்பீட்டு முகாம் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை திரளாக வந்து புகார் அளித்தனர்.
                      இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல் கோரியவர்களில் 84 ஆயிரம் பேருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இவர்களில் 5,600 பேர் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. மறுமதிப்பீடு கோரியவர்களில் சுமார் 4 ஆயிரம் பேரின் மதிப்பெண்ணில் மாறுதல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பி.., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில்படிப்புகளுக்கான முக்கியப் படிப்புகளில் மட்டும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு 10 மதிப்பெண் வரை குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
                        அதேபோல், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு 14 மதிப்பெண் வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.., எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் மறுமதிப்பீட்டுக்குக் கட்டணம் செலுத்தாத பல மாணவர்களுக்கும் கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்தது கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர். எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா? சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி மாணவியான நிதிஷா பிளஸ் 2 தேர்வில் 1,177 மதிப்பெண் பெற்றிருந்தார். இவரது எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் 197.25 ஆகும். இவருக்கு உயிரியல் பாடத்தில் 197 மதிப்பெண் கிடைத்தது. எனவே, இந்தப் பாடத்துக்கான விடைத்தாளைக் கோரியுள்ளார். ஆனால், விடைத்தாளை வாங்கி பரிசீலித்த பிறகு ஆசிரியரின் அறிவுரையை ஏற்று மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று நிதிஷா தெரிவித்தார். ஆனால், அவரின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவரின் உயிரியல் பாட மதிப்பெண்ணும் 196 ஆகக் குறைந்தது. இதைத்தொடர்ந்து அவரது கட்-ஆஃப் மதிப்பெண் 196.75 ஆகக் குறைந்துள்ளது. இப்போது எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 1716-ஆவது இடத்தில் உள்ளார்.
                                பழைய மதிப்பெண்ணே இருந்தால் தரவரிசையில் 1,400 இடங்களில் இடம் கிடைத்திருக்கும். இப்போது எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலையில் உள்ளதாக அந்த மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இந்த மாணவி தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்தவில்லையே தவிர, ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து சலானைப் பதிவிறக்கம் செய்துள்ளார். மூன்று நாள்கள் மட்டுமே இடைவெளி இருந்ததால் முதலில் சலானைப் பதிவிறக்கம் செய்தோம். அதன்பிறகு ஆசிரியர்களிடம் கேட்டதில் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பில்லாததால், கட்டணம் செலுத்தவில்லை என அந்த மாணவி தெரிவித்தார். அதேபோல், சென்னை அசோக்நகர் பள்ளியில் படித்த டி.விஜயகுமார் பிளஸ் 2 தேர்வில் 1,143 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 192.5 ஆக இருந்தது. பழைய பேப்பர் வியாபாரியான இவரது தந்தை தங்கராஜ் தனது மகனை எப்படியும் பி.டி.எஸ். படிப்பில் சேர்த்துவிடலாம் என எண்ணியிருந்துள்ளார்.
                ஆனால், உயிரியல் பாடத்தில் இந்த மாணவர் மறுமதிப்பீட்டுக்குக் கட்டணம் செலுத்தாமலே இவரின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதாகவும், மறுமதிப்பீட்டில் உயிரியல் பாட மதிப்பெண் 191-லிருந்து 185 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், இந்த மாணவரின் இப்போதைய கட்-ஆஃப் 188.5 ஆக குறைந்துள்ளது. இதேபோல், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இளங்கோவன், போக்குவரத்துப் பணியாளரான கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்காமலேயே வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்தனர்.
மாணவர்களுக்குச் சாதகமான முடிவு
               மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் குறைந்தது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகே சலானை பதிவிறக்கம் செய்ய முடியும். இது தேர்வுத்துறையின் தவறல்ல. இதுதொடர்பாக தெளிவான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் அதிக மதிப்பெண் கிடைத்திருந்தால் பெற்றோர் அமைதியாகச் செல்கின்றனர். மதிப்பெண் குறைந்தவர்கள் மட்டுமே பிரச்னை செய்கின்றனர். எனினும், மாணவர் நலன் கருதி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மட்டும் பழைய மதிப்பெண் வழங்க முடியுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்குச் சாதகமான முடிவு எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிரச்னைக்கு என்ன காரணம்? ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துவிட்டது. ஆனால், பல ஊர்களில் மின்சார விநியோகம், இணையத் தொடர்பு சீராக இல்லை என்றும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க குறைந்த கால அவகாசமே தரப்பட்டது என்றும் பெற்றோர் தெரிவித்தனர். இணையதளமும் அவ்வப்போது பழுதடைந்துவிட்டதால் விடைத்தாளைப் பதிவிறக்கம் செய்தபோதே, முன்னெச்சரிக்கையாக மறுமதிப்பீட்டுச் சலானையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் மட்டுமே சலானைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால், இதுவே அவர்களுக்கு எதிரான அம்சமாக மாறிவிட்டது.

              ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்த பிறகு பல மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை. கட்டணம் செலுத்தாதன் மூலம் மறுமதிப்பீட்டுக்கு நாங்கள் விண்ணணப்பிக்கவில்லை என நினைத்தோம். விண்ணப்பிக்காமலேயே மதிப்பெண் குறைந்துள்ள எங்களுக்கு பழைய மதிப்பெண்ணையே வழங்க வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளிலிருந்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரினர். பல பெற்றோருக்கு மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறையும் என்றுகூடத் தெரியவில்லை. எனவே, இதுகுறித்தும் தேர்வுத் துறை மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சில பாடங்களில் மிக அதிக எண்ணிக்கையில் மதிப்பெண் மாறுபடுகிறது. இந்த விடைத்தாள்களைத் திருத்தும்போது கவனக் குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோரினர்.

No comments:

Post a Comment