Friday 14 June 2013

முதுகலை ஆசிரியர்களுக்கு எட்டாக்கனியாகும் பதவி உயர்வு, பேராசிரியர் நியமனத்தில் தொடரும் சிக்கல்


           தமிழக அரசு சார்பில் அரசு கலை கல்லூரிகளில் அவ்வப்போது பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணி அனுபவம் முதன்மையாக கருதப்படுகிறது.ஒரு சுயநிதி கல்லூரியில் 7 ஆண்டுகள் பணியாற்றும் நபர்கள் எளிதாக
இப்பணியிடங்களை பெற்றுச் செல்கின்றனர். உரிய கல்வி தகுதிகள் இல்லாதபோதும் அவர்களுக்கு பேராசிரியர்கள் பணி கிடைப்பது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் உரிய கல்வி தகுதிகளோடு டாக்டர் பட்டம் வரை பெற்றவர்கள், பணி அனுபவம் இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் இன்றளவில் இடைநிலை ஆசிரியர்கள் உரிய கல்வி தகுதியை பெறும் போது பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள் தேவையான கல்வி தகுதி பெறும்போது முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்படுகிறார். ஆனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பதே இல்லை.

                             சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உரிய கல்வி தகுதிகள் இருந்தால், அவர்கள் அரசு கலை கல்லூரிகளில் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இப்போது முதுகலை ஆசிரியர்கள் எம்.பில், பி.எச்டி முடித்து, செட், நெட் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், கல்லூரி பேராசிரியர்களாக நியமனம் செய்யப்படுவது குதிரை கொம்பாக உள்ளது. ஏனெனில் அரசு கலை கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் பணி அனுபவத்துக்கு வழங்கப்படுகிறது.ஏதாவது ஒரு சுயநிதி கல்லூரியில் 8 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, உரிய கல்வி தகுதி இல்லாமல் வருவோர் அரசு நிர்ணயிக்கும் 15 மதிப்பெண்களையும் சுலபமாக பெற்று பணிக்கு தேர்ச்சி பெற்று விடுகின்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவோரின் பணி அனுபவங்கள் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை.மேலும் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் பெறுவதில் சமீபகாலமாக முறைகேடுகள் பெருகிவிட்டன. பலர் கல்லூரிகளில் பணியாற்றாமலே, 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் பணியாற்றியதாக சான்றிதழ் வாங்கி வந்து பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் உரிய கல்வி தகுதி பெற்று அரசு கலை கல்லூரி பேராசிரியர் பணிக்காக காத்திருப்போர் ஏமாற்றம் அடைகின்றனர்.

No comments:

Post a Comment