Saturday 15 June 2013

6–வது ஊதிய குழுவின் முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 27–ந்தேதி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு



                     தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு.பால்பாண்டியன், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு அரசுப்
பணியாளர்களின் ஊதியத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளை களைவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின்படி ஊதியக் குழு முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கூடுதல் அரசு செயலாளர் எம்.பத்மநாபன், இணை செயலாளர் பி.உமாநாத் ஆகிய 3 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அந்த அரசாணையில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, இக்குழு அனைத்து அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து 9.7.2012 முதல் 11.7.2012 தேதி வரை பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது பேச்சுவார்த்தை நடத்தி சுமார் ஓராண்டு நிறைவடையும் நிலையிலும் கூட அதன் அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது. எனவே மேற்கண்ட ஊதியக் குழுவின் முரண்பாடுகளை களையும் மூவர் குழுவின் அறிக்கையை கேட்டுப் பெற்று அதன்மீது சங்கங்களை அழைத்து பேசி, உருவாக்கப்படும் நல்ல தீர்வினை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 27–ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு கடிதத்தில் கு.பால்பாண்டியன் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment