Monday 24 June 2013

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, இந்தாண்டும், 8.5 சதவீத வட்டியே வழங்கப்படும். இதில், மாற்றம் செய்வதில்லை, என, இ.பி.எப்.ஓ., அமைப்பு முடிவு செய்துள்ளது.


                          தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களாக உள்ளவர்களுக்கு, கணக்கில் உள்ள முதலீட்டுக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, வட்டி விவரம், ஒவ்வொரு நிதி ஆண்டின்
துவக்கத்தில் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்தாண்டு இறுதியில் தான் அறிவிக்கப்பட்டது. கடந்த, 2012-13 நிதியாண்டில், 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு, 8.25 சதவீத வட்டி அளிக்கப்பட்டது.
நிதி முதலீட்டு கமிட்டி
             இ.பி.எப்.., என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ஆலோசனை வழங்கும் நிதி முதலீட்டு கமிட்டி, எவ்வளவு வட்டி அளிக்கலாம் என, பரிந்துரை அளிக்கும். இந்த பரிந்துரை, மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையிலான மத்திய அறக்கட்டளை வாரியம் கூடி ஆய்வு செய்து முடிவு அறிவிக்கும். பின், அது நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். நிதி அமைச்சகம் அதை ஏற்று, அறிவிப்பு வெளியிட்ட பிறகே, சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும் . இந்நிலையில், .பி.எப்.., அமைப்பு மத்திய அறக்கட்டளை வாரியத்தை மாற்றியமைத்தது. அதே போல், அறக்கட்டளையின் அடுத்த கூட்டத்தில், முதலீட்டு ஆலோசனை கமிட்டி மாற்றி அமைக்கப்படும். இந்த காரணங்களால், .பி.எப்., முதலீட்டுக்கு, கடந்தாண்டு வழங்கப்பட்ட, 8.5 சதவீத வட்டியே, இந்தாண்டும் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகரிக்க வாய்ப்பு இல்லை, என, மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களாக, ஐந்து கோடி பேர் உள்ளனர். இதன் மூலம் திரட்டப்பட்ட மொத்த நிதியிலிருந்து, ஐந்து லட்சம் கோடி ரூபாய், மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, மொத்த நிதியில், 55 சதவீதம் ஆகும். இதற்கு கிடைக்கும் வருவாய் ஆதாயத்தில் இருந்துதான், வட்டி அளிக்கப்படுகிறது.
பரவலான கருத்து

                           மீதமுள்ள நிதியில், கணிசமான அளவு நிதியை, பங்குசந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், அதிலிருந்து கிடைக்கும் நிதியின் மூலம் சந்தாதாரர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment