Monday 10 June 2013

தமிழகத்தில் 900 நர்சரி பள்ளிகளை மூட அரசு உத்தரவு


            அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், இன்று துவங்கியுள்ள
நிலையில், மாற்று ஏற்பாடு குறித்து அரசு அறிவிக்காததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 7,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகளும், 4,500க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.தனியார் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், தேவராஜன் தலைமையில், "தனியார் பள்ளி நிலம் பற்றாக்குறை தீர்க்கும் வல்லுனர் குழு" அமைக்கப்பட்டதுஇக்குழு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. மூன்று மாதங்களாகியும் குழு சார்பில், முடிவாக எந்தவித அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பித்ததாக தெரியவில்லை.
                                இச்சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட, 30 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த, 900 நர்சரி பள்ளிகளில், கட்டமைப்பு வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, நிலம் குறைவாக இருத்தல் போன்ற காரணங்களைத் தெரிவித்து, பள்ளிகளை மூட உத்தரவிட்டனர். சென்னை, கடலூர், கோவையில் செயல்பட்டு வந்த, 300க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லாத, நர்சரி பள்ளிகளை மூடவும், "நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளன. விரைவில், இப்பள்ளிகளும் மூடப்படும் எனத் தெரிகிறது. "தனியார் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்த குழு, அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்காத நிலையில், "இலவச கட்டாய கல்வி சட்டம் - 2009"யை காரணம் காட்டி, நர்சரி பள்ளிகளை மூடி வருவது கண்டத்துக்குரியது" என நர்சரி பள்ளி நிர்வாகத்தினர் கருத்து தெரிவித்தனர்; கல்வித்துறை கெடுபிடி செய்வதாக சிலர் புகார் கூறினர்.
                          பள்ளி கட்டணங்களைச் செலுத்தி, நர்சரி பள்ளியில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தொடர்ந்து பள்ளிகள் மூடப்படப்பட்டு வருவதால், பெற்றோரும், மாணவர்களும் பீதியில் உறைந்துள்ளனர். அரசு சார்பில், எவ்வித மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை. பல மாவட்டங்களில், பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் இடையே மோதல்களும் அரங்கேறி வருகின்றன. தற்போது பள்ளிகளும் துவங்கி விட்டதால், மற்ற பள்ளிகளில் சேர,இம்மாணவர்களுக்கு உடனே இடம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பள்ளிகளில் கல்விக் கட்டணம் கட்டிய பெற்றோரின் பணம், என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
                              இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சங்கத் தலைவர், நந்தகுமார் கூறியதாவது:கடந்தாண்டு, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, 1.50 லட்சம் வரை குறைந்துள்ளது. அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தேவையற்ற காரணம் காட்டி, மிரட்டி, நர்சரி பள்ளிகளை, அரசு மூடி வருகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறவே இன்றி, நூற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அப்பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, ஒப்புதல், புதுப்பித்தல் ஆணை வழங்கப்பட வேண்டும்இதற்காக, அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட, நர்சரி பள்ளிகள் விண்ணப்பித்த போதும், உடனே ஒப்புதல், புதுப்பித்தல் ஆணை வழங்கப்படுவதில்லை. நர்சரி, பிரைமரி பள்ளிகளின் விதிமுறைகளின்படி, இப்பள்ளிகளைத் துவங்க, இவ்வளவு பரப்பளவு இடம் இருக்க வேண்டும் என, எங்கும் வரையறுக்கப்படவில்லை

                                மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி துவங்குவதற்கு மட்டுமே, இடத்தின் பரப்பளவு குறித்த வரையறை உள்ளது.எனவே, இடம் குறித்து எவ்வித விதிமுறையும் வரையறுக்கப்படாத நிலையில், நிலம் குறைவாக இருப்பதாகக் கூறி, நர்சரிபள்ளிகளை மூடுவது, கண்டிக்கத்தக்கதுதற்போது மூடப்பட்டுள்ள, 900 பள்ளிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்; அவர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு நந்தகுமார் கூறினார். தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படுகின்றன. அரசாணை, 48ன் படி, குறைவான நிலம் என்ற காரணம் காட்டி, இரண்டு ஆண்டுகளுக்காக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பித்தல் ஆணையை, அரசு வழங்காமல் உள்ளது. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்தும், 2,000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதுப்பித்தல் ஆணையும் வழங்கப்படவில்லை. இப்பள்ளிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளனபுதுப்பித்தல் ஆணை இல்லாத காரணத்தால், பள்ளி வாகனங்களுக்கான தகுதிச் சான்று பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment