Monday 10 June 2013

கல்வி துறை கேட்கும் "விருப்ப கடிதம்": ஆசிரியர்கள் எதிர்ப்பு



             தமிழகத்தில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்தாண்டு பிறப்பித்துள்ள "விருப்ப கடிதம்" உத்தரவால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தாண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் பணிமூப்பு பட்டியலை பள்ளிக் கல்வி வெளியிட்டுள்ளது. இதற்கான பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் கலந்தாய்வு  விரைவில் அறிவிக்கப்படலாம் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கல்வித் துறை இந்தாண்டு பிறப்பித்துள்ள புதிய உத்தரவால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. அதாவது, ஒரு பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு பெறும்போது முதுகலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகும் வாய்ப்புள்ளது.
                                
முதுகலை ஆசிரியராக செல்லும் ஒருவர், பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆகவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்தாண்டு உத்தரவால், ஒரு பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால், அவர் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக, பணிமூப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்களிடம் கல்வித் துறை சார்பில் "விருப்பக் கடிதம்" கேட்கப்பட்டுள்ளது. அதில், "பதவி உயர்வின் போது நீங்கள் முதுகலை ஆசிரியராக செல்ல விருப்பமா? அல்லது உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக செல்ல விருப்பமா? என தெரிவித்து, முதன்மை கல்வி அலுவலர்களிடம் விருப்பக் கடிதம் அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பட்டதாரி ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட தலைவர் நாகரத்தினம், செயலாளர் முருகன் கூறியதாவது: ஐந்து ஆண்டுகள் முதுகலை ஆசிரியராக பணியாற்றினால், பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகும் நடைமுறை 1978 முதல் உள்ளது. இதை மாற்றினால் குழப்பம் ஏற்படும். 2010ம் ஆண்டில் இதே பிரச்னை எழுந்தது. ஒட்டுமொத்த ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது, என்றனர். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மாநில சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், "விருப்பக் கடிதம் உத்தரவு ஆசிரியர்களின் அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது. கல்வி துறை இதை திருப்பப் பெறவேண்டும்" என்றார்
.

No comments:

Post a Comment