Friday 7 June 2013

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு



                கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ.55.82 கோடி அளவிலான ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், 4 ஆயிரத்து 784 கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட
அறிவிப்பில்: தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியானது தொடர்ந்து லாபத்தில் செயல்பட்டு 2011-12 ஆம் நிதியாண்டில் ரூ.41.51 கோடி அளவுக்கு நிகர லாபம் ஈட்டியுள்ளது. தலைமை கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கும் 23 மத்திய கூட்டுறவு வங்கிகளில் 19 வங்கிகள் தொடர் லாபத்திலும், மற்ற நான்கு வங்கிகள் நடப்பு லாபத்திலும் செயல்பட்டு வருகின்றன.இந்த வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வழங்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தமானது கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்தது.நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வை கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரைக் கேட்டுக் கொண்டேன்.
                                    
இதையடுத்து, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஊதிய விகித உயர்வு குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பரிசீலனை செய்தார். தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி ஒரு பிரிவாகவும், ரூ.1,700 கோடிக்கு மேல் ஆண்டு வணிகம் செய்து தொடர் லாபம் ஈட்டி வரும் வங்கிகளை ஒரு பிரிவாகவும், ரூ.1,700 கோடி வரை வணிகம் செய்து தொடர் லாபத்தில் இயங்கும் வங்கிகளை ஒரு பிரிவாகவும், நடப்பு லாபத்தில், குவிந்த நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை ஒரு பிரிவாகவும் பிரித்து வங்கிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பரிந்துரை செய்துள்ளார்.ஆய்வுக் கூட்டம்: ஊதிய உயர்வு குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படட முடிவுகளின்படி, ஊதிய உயர்வுகள் வழங்கப்பட உள்ளன. அதன்விவரம்:
                                       
தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 21 சதவீத ஊதிய உயர்வு கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும்.கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, ரூ.1,700 கோடிக்கு மேல் ஆண்டு வணிகம் மேற்கொண்டு தொடர்ந்து நிகர லாபத்தில் செயல்பட்டு வரும் சென்னை, கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய ஒன்பது மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு 2011 ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.இதேபோன்று, ரூ.1,700 கோடி வரை வணிகம் மேற்கொண்டு, நிகர லாபத்தில் செயல்பட்டு வரும் கும்பகோணம், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய ஒன்பது மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும்.
                
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் மிகவும் குறைவாக உள்ளதால், இந்த வங்கியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு 2011 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகை முன்தேதியிட்டு வழங்கப்படும்.குவிந்த நட்டத்திலும், நடப்பு லாபத்திலும் செயல்பட்டு வரும் நீலகிரி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நான்கு மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்த வங்கிகளின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ஏழு சதவீத ஊதிய உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான இந்த ஊதிய உயர்வு உரிய சட்ட நடைமுறைகளின்படி வழங்கப்படும்.
                                  4,784
பணியாளர்: ஊதிய உயர்வு மூலம் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 4 ஆயிரத்து 784 பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,630-ம், அதிகபட்சம் ரூ.15,760-ம் ஊதிய உயர்வு பெறுவர்.இதனால், ரூ.55.82 கோடி அளவுக்கு தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆண்டுதோறும் கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment