Friday 14 June 2013

கனவாகிப் போகும் மருத்துவப் படிப்பு: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்


               அரசுப் பள்ளியில் படித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 3.4 சதவிகிதம்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் 1000
மாணவர்களில் வெறும் 34 மாணவர்களே அரசு பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகள் சோபிக்காதது ஏன்?
            தமிழகத்தில், 2011-12ம் கல்வியாண்டில், மொத்தமுள்ள ஆயிரத்து 965 மருத்துவ இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களில், கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் வெறும் 67 பேர் மட்டுமே. அதாவது மொத்த இடங்களில் மூன்று புள்ளி நான்கு சதவிகிதம் மட்டுமே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள். இந்த அதிர்ச்சிகர தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் சுமார் ஓராண்டாகப் போராடி பெற்றுள்ளார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து அவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக நிர்வாகங்கள் மாற்றுவதால், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் ஜொலிக்க முடிவதில்லை என்று கூறுகிறார் ஈஸ்வரன்.
                   
அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பாக படித்து பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இதற்கு ஒரு உதாரணம்தான், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி விஜயலட்சுமி. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால், மருத்துவராகும் லட்சியத்தை கைவிட்டு, பொறியியல் படிப்பை முடித்துள்ளார் இவர். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஜொலிக்க முடியவில்லை என அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, அங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர்களும், பிற ஆசிரியர்களும் கூட ஆதங்கப்படுகின்றனர்.
                    
திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஜரீன்பானு பேகம், தனது மனதில் உள்ள குறையை புதிய தலைமுறையிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா?
              தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் ஜொலிக்க முடியாமல் தவிப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பள்ளி மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த காலங்களில் இருந்தது போல், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 15 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முறையை, மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
.

No comments:

Post a Comment