Wednesday 12 June 2013

அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


             அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் நலத்திட்டங்கள்
             தமிழ்நாட்டில் 23,522 அரசு தொடக்கப்பள்ளிகளும், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு அரசு வழங்கும் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, காலணிகள், ஜாமெட்ரிபாக்ஸ், சீருடைகள் போன்றவற்றை முன்னிறுத்தியும் மாணவர் பேரணி, சிறப்பு கூட்டம், நாடகங்கள், விழிப்புணர்வு பாடல்கள் மூலமாகவும் நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேசுவரமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கல்வி விழிப்புணர்வு முகாம்கள்
* தமிழகத்தில் உள்ள பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க சிறப்பு சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
* பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பள்ளியில் சேராத, பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை வீடுகள் வாரியாக கண்டறிதல், அவர்களை பள்ளியில் சேர்த்தல், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, அரசின் நலத்திட்டங்கலை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லுதல் ஆகியவை இதன் நோக்கங்கள் ஆகும்.
வீடு வீடாக சென்று ஆய்வு
* அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்களும், ஆசிரியர்களும் தங்களுக்குரிய பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வயது மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை, தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று கண்டறிய வேண்டும்.
* ஐந்து வயது நிரம்பிய குழந்தைகள், ஒருபோதும் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் ஆகியோரையும் கண்டறிந்து பெயர் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
பேரணிகுறுநாடகங்கள்
* ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட வேண்டும். மாணவர் ஊர்வலம், சிறப்பு கூட்டம், குறு நாடகங்கள், விழிப்புணர்வு பாடல்கள் ஆகியவற்றை நடத்தலாம்.
* ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிப்பொருள் வழங்குதல், தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், 100 சதவீதம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கும் பரிசு வழங்குவது ஆகிய பணிகளையும் செய்யலாம்.
விலையில்லா பொருட்கள்
* பள்ளிக்குழந்தைகளுக்கு அரசு வழங்கும் இலவச சீருடைகள், விலையில்லா புத்தகப்பை, வண்ணப் பென்சில், காலணிகள், சத்துணவு, இலவசப் பாடப்புத்தகங்கள், விடுதிகளில் வழங்கப்படும் சலுகைகள், உதவி பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* பள்ளியில் நேரடியாக சேர்க்க இயலாத குழந்தைகள், உடனடியாக மாற்றுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களின் ஒன்றிய வாரியான அறிக்கையை தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment