Friday, 14 June 2013

குழப்பமான அரசாணையால் ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்: 20 ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு



             எம்.எட்., உடன், எம்.பில்., மற்றும் பி.எச்டி., தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு, இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வழி வகை செய்யும் அரசாணை, குழப்பங்கள் நிறைந்ததாக இருப்பதால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு
பள்ளி ஆசிரியர்கள், ஊக்க தொகையை பெற முடியாமல், தவித்து வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவியில் (பட்டதாரி ஆசிரியர்) பணிபுரியும்போது, எம்.எட்., தகுதி பெற்றிருந்தால், இரண்டாவது ஊக்கத் தொகை வழங்கலாம் என, கடந்த ஜனவரி, 18ம் தேதி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது.
அரசாணை விவரம்:
                           
பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா பிறப்பித்த இந்த அரசாணையில், "எம்.எட்., படிப்பு, தற்போது தொலைதூர கல்வி திட்டத்தில் இல்லாததால், ஏற்கனவே எம்.எட்., படித்தவர்களையும் உள்ளடக்கி, கூடுதலாக எம்.பில்., மற்றும் பி.எச்டி., தகுதிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு, இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியில் இருந்து, இரண்டாவது ஊக்கத் தொகையை வழங்கலாம் என்று, அரசாணையில் குறிப்பிடப் படவில்லை. அரசாணை வெளியான தேதியில் இருந்து, வழங்கப்படும் எனவும், கூறவில்லை. மொட்டையாக, குறிப்பிட்ட தகுதி கொண்ட ஆசிரியர்களுக்கு, இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுக்கின்றனர்:
                        
எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்பதை குறிப்பிடாததால், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க, கருவூலத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அரசாணையில் உள்ள பிரச்னையை, அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
எட்டாத நிலை:
                                
இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது: கடந்த, 2006ல், டி.ஆர்.பி., மூலம் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இரண்டாவது ஊக்க ஊதியம் பெறுவதற்கான தகுதியுடன் உள்ளனர். ஊக்க ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்ட அரசு, அதில், எந்த தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்ற, முக்கிய வார்த்தையை சேர்க்காததன் காரணமாக, கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத நிலையில், தவித்து வருகிறோம். அரசாணையில் உள்ள குறையை நிவர்த்தி செய்தால் தான், அதன் பலன், ஆசிரியர்களுக்கு சென்று சேரும். அடிப்படை சம்பளத்தில், 6 சதவீதம், ஊக்கத் தொகையாக உயரும். இதனால், டி.., மற்றும் எச்.ஆர்.., படியும் உயரும். சம்பளத்தில், 1,000 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார். இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த பிரச்னை, விரைவில் தீர்க்கப்படும்' என, தெரிவித்தன
.

No comments:

Post a Comment