Saturday 23 February 2013

மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்



              சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க
அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. முதலில் 14 பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரியவர்களிடம் தகுந்த வசதிகள் இல்லாததால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எல்காட் நிறுவனம் மூலம் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் கொண்ட சென்னைப் பள்ளிகளை 5 ஆண்டுகளுக்கு இயக்க தோராய மதிப்பு பெறப்பட்டது. இதன்படி ஒரு பள்ளிக்கு ரூ. 5.76 லட்சம் செலவாகும். மொத்தம் 14 பள்ளிகளுக்கு ரூ. 80.65 லட்சம் செலவாகும். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும்.
                           எனவே "ஸ்மார்ட்' வகுப்பறை வசதியை எல்காட் நிறுவனம் மூலம் பெறவும், கட்டட துறையின் மூலம் தளவாடங்கள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கவும், இதற்கான செலவை 2012-13 பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னைப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குவது மற்றும் புனரமைத்தல் தொடர்பான தீர்மானமும் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 76 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் 100 புத்தகங்கள் அடங்கிய செட் வழங்கப்படும்.

No comments:

Post a Comment