அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நலவாழ்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் கி. ராமசுப்பு தெரிவித்துள்ளார். இது
குறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுவாக, தொற்றுநோய்களான வைரஸ் காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளது. இருதய நோய், நீரிழிவு, மன அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல் போன்றவை குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்தில் 48 பள்ளிகளில் நலவாழ்வு மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.மாவட்ட சுகாதார திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து செயல்படுத்தும் இந்த மன்றம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, வட்டாரம் வாரியாக அரசு நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு இருதய நோய் என்றால் என்ன, உடல் பருமனாகினால் எவ்வித பாதிப்புகள் ஏற்படும், புகைப்பிடித்தலினால் ஏற்படும் தீமைகள், பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளால் ஏற்படும் விளைவுகள், காய்கறிகளை சாப்பிடுவதால் விளையும் நன்மைகள் குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், தொற்று நோய்களிலிருந்து தம்மை தற்காத்து கொள்வதற்கான உடற்பயிற்சி, யோகா குறித்து வரைபடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தந்த பள்ளி குடியிருப்பு பகுதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும், படங்கள் வடிவமைத்து சிறந்த வாசகங்களை எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவில் சிறந்த போஸ்டர்கள் மற்றும் வாசகங்களை எழுதிய மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் மாவட்ட அளவில் முதல் பரிசாக 16 ஆயிரத்து 635 ரூபாய், மாநில அளவில் முதல் பரிசாக 83 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது என்றார். ஆசிரியப் பயிற்றுநர்கள் உமா மகேஸ்வரி, முருக திருநாவுக்கரசு, பெத்தணசாமி, பொற்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment