தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆர். வெங்கடாசலம் பொது நல
மனு தாக்கல் செய்துள்ளார். 16.7.2004 அன்று கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 87 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியது. பாதுகாப்பான கட்டடம் என்பதை உறுதி செய்வதற்காக பள்ளி அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.எனினும், சென்னை வியாசர்பாடியில் இயங்கும் ஒரு தனியார் பள்ளி அத்தகைய சான்றிதழ் எதையும் பெறவில்லை. அந்தப் பள்ளிக்கான அங்கீகாரமும் புதுப்பிக்கப்படவில்லை. கடந்த 1.6.2011-ம் தேதியிலிருந்து உரிய அங்கீகாரம் பெறாமலேயே அந்தப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் அந்தப் பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாநிலம் முழுவதும் உரிய அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகளின் பட்டியலை வெளியிடவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் வெங்கடாசலம் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் எம். ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment