Tuesday 26 February 2013

நித்திரையை தொலைப்பவர்கள்.......



            தை பிறந்தால் வழி பிறக்கம் என்பது முதுமொழி. தை பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ, மாணவர்களுக்கு வலி பிறந்து விடுகிறது. தையைத் தொடர்ந்து வரும் மாதங்கள் தேர்வு மாதங்கள். குருப்பார்வை, சனிப்பார்வையைப் போல தேர்வுப் பார்வை அவர்களை ஆட்டிப்படைக்க இருக்கிறது. அவர்களை எழுப்ப நான்கு
மணிக்கெல்லாம் அடிக்க ஆரம்பிக்கும் அலாரம். ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை அடித்துக் கொண்டேயிருக்கும். "எழுந்து விட்டாயா? முகம் கழுவியாச்சா? என்ன படிக்கிறாய்? இவ்ளோ நேரமா சாப்பிட? பள்ளியில் என்ன நடந்தது? டியூசனில் என்ன கொடுத்தாங்க? ஏன் மதிப்பெண் குறைந்தது?......இப்படி எழும் கேள்விகளுக்கு அவர்களால் நின்று நிதானித்து பதில் சொல்லக் கூட நேரம் கிடைக்காது. கடிகாரம் ஓடும் முன் ஓட வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். அரசு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் பாடு பாவம் தான்.
                             
சில பெற்றோர்கள் தூக்கத்தில் இருக்கும் குழந்தையை அர்த்த ராத்திரியில் எழுந்து உட்கார்ந்துக் கொண்டு பின்ளையிடம் ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மதிப்பெண்கள் வரும்?'' எனக் நச்சரிப்பார்கள். ''எவ்வளவு வரதட்சனை கிடைக்கும்?'' என மாமியார் கேட்பதைப்போல இவர்கள் " எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும்?" எனக் கேட்பார்கள். சக்கரம் ஒரே அச்சின் கீழ் சுழலுக்கூடியது. மாணவர்களும் அப்படிதான். அரசுப் பொதுத்தேர்வை அச்சாகக் கொண்டு சுழலக்கூடியவர்கள். முக்கியமான பாடம், முக்கியமான கேள்வி இவற்றைத்தவிர அவர்கள் படிக்க நிர்ப்பந்திக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இடம் பிடிப்பவர்கள் பதினொன்றாம் வகுப்பு தேர்வை மேம்புல் மேய்வரைப்போல எழுதுவதை தெரியவரும். "எப்படி இருந்த இவர்கள் இப்படியாகி விடுகிறார்கள்".
                                
இந்த ஆண்டு பொதுத்தேர்வு மட்டுமில்லாமல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும் அரசே நடத்துகிறது. பச்சைக்கொடி காட்டி வரவேற்க வேண்டிய ஒன்று. சமச்சீர் கல்வியைப் போல இது சமச்சீர் தேர்வு. இருப்பினும் படிப்பதற்கான சூழல் சமச்சீராக இருக்கிறதா? என்பதையும் நாம் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் மூன்று இடங்கள் சென்னையில் பிடித்தால் அவ்வளவு தான். எவ்வளவு லட்சம் கேட்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. நம் பெற்றோர்களுக்கு எப்படியாவது தன் பிள்ளைகள் மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளியில் தான் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம்.
                              
டெங்கு ஜுரத்தைப் போல தேர்வு ஜுரத்திற்கும் இது நாள் வரைக்கும் மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. ஆனால் வரும் முன் காப்பதைப் போல அரசு, எடுக்கும் நடவடிக்கை ஆரோக்கியமானது. தேர்தல் சீர்த்திருத்தத்தைப் போல தேர்வுசீர்த்திருக்தத்தை அரசு கையாண்டு வருகிறது. இதன் விளைவு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடக்குமா? அப்படியே நடந்தாலும் ஒருவர் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடியுமா? தேர்ச்சி, தோல்வி சொற்கள் நடைமுறையில் இருக்குமா? என்பதெல்லாம் நம் முன் நிற்கும் கேள்விகள். புதிதாக முப்பருவ முறையை பத்தாம் வகுப்பு வரை நீட்டிருயிருக்கிறது அரசு.
                                  
இன்றைய நாட்களில் மாணவர்களுக்கு படிக்கவே நேரம் போதவில்லை. இதற்கிடையில் மாணவர்களுக்கு வழிக்காட்டும் நிகழ்ச்சிகள் என்று அலைக்கழிக்கப்படும் அவலத்தை என்னவென்று சொல்வது. பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர்கள் மாணவர்களுக்கு வழிக்காட்டும் கொடுமையை தமிழ்நாட்டில் மட்டும் தான் பார்க்க முடியும். மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மகாத்மாக்கள், தேர்வு முடிவு வந்தப்பிறகு பூதக் கண்ணாடி வைத்து தேடினாலும் கண்களில் சிக்க மாட்டார்கள். நாம் பிள்ளைகளுக்கு எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதைத்தான் சொல்லிக் கொடுக்கிறோமே தவிர, தேர்வுக்காலங்களில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என சொல்லவதில்லை. புலி மானை இரையாக பார்ப்பது போல நாம் மாணவர்களை மதிப்பெண்களாக பார்க்கிறோம். ஆக மாணவர்கள் பாவம்...... தேர்வு முடியும் வரை தன் நித்திரையை தொலைத்து கொண்டிருக்கின்றார்கள்
.

No comments:

Post a Comment