Saturday, 23 February 2013

போட்டி அதிகம் - என்ன செய்கின்றன வணிகப் பள்ளிகள்?



            இந்தியாவில் தற்போது 3500க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் இருந்தாலும், புதிதுபுதிதாக வணிகப் பள்ளிகள் முளைப்பதும் நின்றபாடில்லை. இத்தகைய போட்டிகள் நிறைந்த சூழலில், வணிகப் பள்ளிகள் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருப்பதற்கு காரணமென்ன என்பதை நாம் யோசிக்க வேண்டியுள்ளது. சில வணிகப் பள்ளிகள்
வேலைக்குத் தேவையான ஆற்றல்களை தர முயல்கின்றன. எனவே, அவை ஸ்பெஷலைஸ்டு படிப்புகளில் கவனம் செலுத்துகின்றன. சில, படைப்பாக்க சிந்தனைகள் மற்றும் புத்தாக்க வணிக தீர்வுகளின்பால் கவனம் செலுத்துகின்றன. சில, இந்திய மேலாண்மைக் கல்வியில், வெளிநாட்டு பயிற்சியைக் கொண்டுவர நினைக்கின்றன. எனவே, நாம் இதைப்பற்றி விரிவாக கலந்துரையாடப் போகிறோம்.
நிறுவன தேவைகளை நிறைவுசெய்யல்
                         நிறுவனங்களுக்கு தேவைப்படும் விதத்தில் மனிதவளத்தை அளிப்பதையே தமது நோக்கமாக பல வணிகப் பள்ளிகள் கொண்டுள்ளன. பலவிதமான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் மாணவர்கள், வேலை வழங்குநர் எதிர்பார்க்கும் திறமைகளைப் பெற்றிருப்பதில்லை. எனவே, இத்தகைய இடைவெளியை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக, அக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வித்தியாசமான அணுகுமுறை
             வணிக செயல்பாட்டில், படைப்பாக ரீதியான தீர்வுகளின் தேவை அதிகமாக உணரப்படுகிறது. எனவே, இதுதொடர்பான ஆர்வமுள்ள தொழில்முனைவோர், வணிகப் பள்ளிகளை உருவாக்கி, படைப்பாக்க ரீதியான வணிகத் தீர்வுகள் மற்றும் புத்தாக்க சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
சிறப்பு படிப்புகள் மற்றும் நடைமுறைக் கல்வி
            நடைமுறை கல்வி தொடர்பான சிறப்பு(specialised) படிப்புகளை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இதன்மூலம், வேலைவாய்ப்புத் திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வங்கியியல், காப்பீடு மற்றும் மீடியா மேலாண்மை ஆகிய அதிக பணியாளர்கள் தேவைப்படும் துறைகளில் வழங்கப்படும் PGDM படிப்புகள், பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவுகின்றன. மேலும், சில கல்வி நிறுவனங்கள், நடைமுறைக் கல்வியை அதிகப்படுத்தும் வகையில், தங்களின் பாடத்திட்டத்தில் சில சிறப்பு அம்சங்களை இணைத்துக் கொள்கின்றன. பசுமை மேலாண்மை மற்றும் i - leadership போன்ற படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தொழிற்சாலை அனுபவம்
           சில கல்வி நிறுவனங்கள், வகுப்பறை கல்வியோடு, தொழிற்சாலை அனுபவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதன்மூலம், தற்போதைய நடைமுறை அம்சங்களை மாணவர்கள் சிறப்பாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்ள முடிகிறது. இத்தகைய கல்வி நிறுவனங்கள், சிறப்பு கல்வித் திட்டங்களைக் கொண்டுள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், படிப்பின்போதே, தொழிற்சாலை அனுபவத்தையும் பெறுகிறார்கள்.
அங்கீகாரம் பெறுதல்
                        ஒவ்வொரு மேலாண்மைக் கல்வி நிறுவனமும், நடைமுறைத் தேவைகளை நிறைவுசெய்து, AICTE அங்கீகாரம் பெற்றிருப்பது மிகவும் அவசியம். மாணவர்கள், ஒரு மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேரும் முன்பாக, அது AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமா? என்பதை உறுதிசெய்து சேர வேண்டும். ஒரு மேலாண்மை கல்வி நிறுவனம், தேவையான வசதிகளைப் பெற்றிருந்து, AICTE விதிமுறைகளை தேவையான அளவில் பூர்த்தி செய்திருந்தால் போதும், அங்கீகாரம் பெறுவது பெரிய விஷயமில்லை.
வேறுபட்ட பின்னணிகள் கொண்ட மாணவர்கள்
           மேலாண்மை படிப்புகளில் சேரும் மாணவர்கள் அதிகம்பேர் பொறியியல் பட்டதாரிகளாகவே இருக்கிறார்கள். இதன்பொருட்டு, வணிகப் பள்ளிகள், கலை மற்றும் இதர அறிவியல் பிரிவுகளில் படித்த மாணவர்களையும், மேலாண்மைப் படிப்பில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதன்பொருட்டு, அவர்களுக்கு சில மதிப்பெண் சலுகைகளையும்கூட, சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
வேலை வாய்ப்புகள்
              சில வணிகப் பள்ளிகள், பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, தங்களின் மாணவர்கள் இன்டர்ன்ஷிப் வாய்ப்பையும், பணி வாய்ப்புகளையும் பெறுவதை எளிதாக்குகின்றன. சில வணிகப் பள்ளிகள், தொழில் முனைவோரை, Guest Lecturer -களாக அழைக்கின்றன. இதன்மூலம், மாணவர்களின் வேலை வாய்ப்பு எளிதாகிறது.
சிறந்த வணிகப் பள்ளியாக மாறுவது எப்படி?
          ஒவ்வொரு வணிகப் பள்ளியும், இந்தியாவின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டுமென விரும்புகின்றன. ஆனால், அந்த நிலையை அடைய அவை அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. மேலாண்மை கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்களின் திறமைக்கும், விருப்பத்திற்கும் பொருத்தமான வணிகப் பள்ளியையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான், கனவுகள் எளிதில் நிறைவேறும்.

No comments:

Post a Comment