அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் அறிவியல் பாடங்களை நடத்தும் புதிய பயிற்சி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த தொடக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6,7,8 வகுப்புகளில் படிக்கும் மாணவ
மாணவியர்களை அறிவியல் பாடங்களை ஆர்வமுடன் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தொடக்க கல்வித் துறை மற்றும் எவரெஸ்ட் எஜூ சிஸ்டம் என்ற தன்னார்வ நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளன. ‘தேடுதல்,ஆராய்தல்,கண்காணித்தல்’ ஆகிய விஷயங்களை கொண்டு அறிவியலை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் முறையை மாணவர்களிடம் அறிமுகம் செய்ய உள்ளனர். இதன் மூலம் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க முடியும். இதற்காக எவரெஸ்ட் எஜூசிஸ்டம் நிறுவனம் பல்வேறு அறிவியல் உபகரணங்களை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. அத்துடன் முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் அந்த உபகரணங் களை கொண்டு அறிவியல் சோதனைகளை செய்தும் காட்டியுள்ளது.குறிப்பாக 6,7,8 வகுப்பு அறிவியல் பாடங்களில் இடம் பெறும் இதயம், மனித உடல் உறுப்புகள், மலரின் பாகங்கள், காந்தத்தின் பண்புகள் ஆகியவற்றை விளக்கும் உபகரணங்கள், வேதியியலில் இடம் பெறும் அமிலம், காரம், உப்பு ஆகியவை லிட்டுமஸ் தாளில் எப்படி வேதியியல் மாற்றங்களை உண்டாக்குகிறது, இயற்பியலில் எலக்ட்ரான், புரோட்டான்களின் ஓட்டம் ஆகியவற்றை விளக்குதல் உள்ளிட்ட சோதனைகள் செய்து காட்டப்படுகிறது. இதற்காக அரசுப் பள்ளியில் பணியாற்றும் 8 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் 40 அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தனர். பின்னர் அவர்கள் அருகாமை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். அவர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் சோதனைகள் செய்து காட்டப்படுகிறது. முதற்கட்டமாக 40 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல தொடக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த திட்டம் குறித்து அறிந்த மத்திய பள்ளிக் கல்வி வாரிய(சிபிஎஸ்இ) பள்ளிகளும் இந்த திட்டத்தை தங்கள் பள்ளிகளில் செயல்படுத்த தொடக்க கல்வித்துறை அதிகாரிகளை நாடியுள்ளனர்.
No comments:
Post a Comment