Friday, 22 February 2013

பழைய பேப்பருக்கு சென்ற விடைத்தாள்கள்! - நாளிதழ் செய்தி



            தேர்வுத்துறை அலட்சியத்தால், பழைய பேப்பருக்கு, விடைத்தாள்கள் விற்கப்பட்டதால், பிப்., 24 ல், ஊரக திறனாய்வு மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. கிராம பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படும். எட்டாம் வகுப்பில் 50 சதவீத
மதிப்பெண் பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 2012 செப்., 23 ல், நடந்த இத்தேர்த்லில், தமிழகம் முழுவதும் 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களது விடைத்தாள்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்த அலுவலர்களின் அலட்சியம் காரணமாக, பழைய பேப்பருடன் கலந்து எடைக்கணக்கில் விற்கப்பட்டுவிட்டன. பின்னர், "அவை பழைய பேப்பர் கடையில் இருந்து, மீட்கப்பட்டு விட்டன என,தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திரா தேவி அகிவித்தார்.
                             
இந்நிலையில், ஊரக திறனாய்வு மறுதேர்வை பிப்., 24 ல், நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 190 பேருக்கு, பிப்., 24 ல், விருதுநகர் சத்திரிய பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி., பள்ளியில் மறுதேர்வு நடக்க உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் வழங்காமல், மாணவர்களை மறுதேர்வுக்கு அனுப்பும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி தேர்வு நெருங்கும் நிலையில், மீண்டும் திறனாய்வு தேர்வு எழுத இருப்பது, மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில், ஊரக திறனாய்வு மறுதேர்வு நடைபெற உள்ளது. இதை, பிப்., 24 ல் நடத்திட தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது ' என்றார்.
                           
தேர்வுத்துறையின் தவறுக்கு மாணவர்களுக்கு தண்டனை: தேர்வுத்துறையின் அலட்சியத்தால் தான் விடைத்தாள்கள் பழைய பேப்பருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், விடைத்தாள்கள் இல்லாதவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆனால், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை இல்லை. தவறு செய்தது தேர்வுத்துறை. மறுதேர்வு என்ற பெயரில் தண்டனை வழங்குவது மாணவர்களுக்கா என, பெற்றோர்கள் குமுறுகின்றனர்
.

No comments:

Post a Comment