Wednesday 27 February 2013

கல்வி துறையில் எகிறும் செலவினம்: எதிர்பார்ப்புகளை நிறைவேறுமா?



           மாநிலம் முழுவதும், 55 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் பணியில், 5.5 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. கடந்த நிதி ஆண்டில், 14,552 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது. வரும் பட்ஜெட்டில், இது, 16 ஆயிரம் கோடியை தாண்டலாம். இத்தனை கோடிகளை, மக்களின் வரிப் பணத்தில் இருந்து, செலவழித்த போதும், இதில் பெருமளவு நிதி, அதிகாரிகள், ஊழியர் சம்பளத்தில் தான் கரைகிறது. கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம், நாள் ஒன்றுக்கு மட்டும், 25.55 கோடி ரூபாய்! மாதத்திற்கு எவ்வளவு, ஆண்டுக்கு எவ்வளவு என்பதை, கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளலாம்.
                                       
சம்பளம் போக, மீதம் உள்ள சொற்ப நிதியுடன், மத்திய அரசு வழங்கும் நிதி உதவியுடன், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் கட்டடங்கள், புதிய பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆகவே, அவற்றில் அதிக வளர்ச்சி காண்பது, சிரமமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசு எடுத்து வரும் தீவிர முயற்சியால், எழுத்தறிவு சதவீதம் அதிகரித்து வருகிறது. கல்வித் தரத்தில், எப்போதும் பின் தங்கியிருக்கும், வட மாவட்டங்களும், தற்போது முன்னேறி வருகின்றன என்பது நல்ல செய்தி. அதிலும் பெண்கள் கல்வி அதிகரித்து வருகிறது. முதல் ஆண்டில் அறிவிக்கப்படும் திட்டங்களை, அடுத்த பட்ஜெட்டிற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, தீவிரமாக செயல்படுகிறார். இதற்காக, மாதத்திற்கு, 10 முறையாவது, அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, திட்ட நிலவரங்களை, அமைச்சரும், செயலரும் ஆய்வு செய்ய, தவறுவது இல்லை.
                                      
பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ், 10 துறைகள் இயங்கி வருகின்றன. அனைத்திற்கும், பள்ளிக்கல்வித் துறை, தலைமைத் துறையாக உள்ளது. இந்த துறையின் கீழ், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என, பல்வேறு அலுவலர்கள், லட்சக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த துறைக்கு மட்டும், ஒன்பது வகையான அறிவிப்புகள், பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன. நூறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல், மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழி இணை வகுப்புகள் துவக்கம், புதிய ஆசிரியர் நியமனம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்புதல் உட்பட, ஒன்பது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. உளவியல் மையங்கள்: இதில், மாணவ, மாணவியரின் மன ரீதியிலான பிரச்னைகளை தீர்க்க, 10 நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, இதுவரை, நடைமுறைக்கு வரவில்லை.
                                 
உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய, நடமாடும் ஆலோசனை மையங்கள், 3 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என, கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், அமைச்சர் சிவபதி அறிவித்தார். இதற்கு, "எம்.எஸ்சி., சைக்காலஜி தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணியை, இனி தான் துவக்க வேண்டும்" என, இணை இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் என்றாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, பள்ளியில் தான், இந்நிகழ்ச்சி நடக்கும்; வாகனத்தில் நடக்காது. வரும் கல்வியாண்டு துவங்கும் போது, இத்திட்டம் நடைமுறைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.
                                
திருச்சியில், 3 கோடி ரூபாய் செலவில், புதிதாக ஆசிரியர் இல்லம் அமைக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பும், நடைமுறைப்படுத்தவில்லை. ஸ்ரீரங்கத்தில், ஆசிரியர் இல்லம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு தேவையான நிலத்தை, மாவட்ட கலெக்டர், இன்னும் ஒதுக்கீடு செய்யாததால், பணிகள் அப்படியே உள்ளன என்றும், அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டம், வரும் கல்வி ஆண்டு தான், துவங்கும் என, கூறப்படுகிறது. இதேபோல், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் இல்லம் புதுப்பிக்கப்படுவதுடன், 3 கோடி ரூபாய் செலவில், கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதில், 50 லட்சம் ரூபாய் செலவில், புதுப்பிப்பு பணிகள் மட்டும் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவங்கவில்லை.
                                      "
திருச்சி மற்றும் சென்னை திட்டத்திற்கான, 6 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, திட்ட வரைபடத்திற்கு அனுமதி, நிலம் ஒதுக்கீடு ஆகிய பணிகள் முடிந்தபின், நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வரும் கல்வி ஆண்டுக்குள், கட்டடம் கட்டி முடிக்கப்படும்" என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment