Saturday 16 February 2013

வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.4 லட்சமாக உயர்த்த காங்., பரிந்துரை: பட்ஜெட் தயாரிக்க குவியும் கோரிக்கைகள்



          வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்துமாறு காங்கிரஸ் அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பரிந்துரை செய்துள்ளனர். இம்மாதம் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய
ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய பட்டியலை சிதம்பரத்திடம் அளித்தனர்.
                காங்கிரஸ் பரிந்துரை : வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு நடுத்தர மற்றும் விவசாயிகளை கவருவதற்காக வருமானவரி சலுகை உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வறுமைகோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அதை சமாளிப்பது தொடர்பான சில கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால் போன்ற பொருட்களைஅதிகளவில் இறக்குமதி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்களின் சுமையை குறைக்க வரிச்சலுகைகள் பல வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். விவசாய துறையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய மகாத்மா காந்தி தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சிறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் எனவும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கவும், அவற்றின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய உதவவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற 46 உறுப்பினர்களில் 32 பேர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், கல்வி, சுகாதாரம், வருமான வரி உள்ளிட்டவைகள் தொடர்பான பரிந்துரைகளை அதிகம் முன் வைத்துள்ளனர்.
                     
சிதம்பரம் பதில் :  சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பரிந்துரைகளை கேட்ட நிதியமைச்சர் சிதம்பரம், இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்ற தாழ்வு காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளதாக தெரிவித்தார். விவசாயத்துறை, சிறுபான்மை இனத்துறை, பழங்குடியினர் வளர்ச்சி, கல்வி, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டவைகள் குறித்தே அதிகளவில் பரிந்துரைகள் வந்துள்ளதாக தெரிவித்த சிதம்பரம், தலைவர்களின் பரிந்துரையின் பேரில் பட்ஜெட் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் செலவு கட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2008-09ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளித்தாரோ அதே போன்று தானும் நெருக்கடியை சமாளிக்க முயற்சிப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
                           
முக்கிய பரிந்துரைகள் : மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என அஜித் ஜோகியும், அதிக எரிவாயு ஒதுக்கீட்டால் நாட்டின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான பிரச்னைகள் குறைக்கப்படும் என ஆஸ்கார் பெர்னாண்டசும் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை, குழந்தைகள் நலம் மற்றும் கல்வி வளர்ச்சி குறித்த பரிந்துரைகளும் அதிகளவில் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் நாட்டின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் ஜெகதீஷ் டைட்லர் தெரிவித்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும், வடகிழக்கு பகுதிகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக நிலவும் பொதுவான கருத்தை மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment