Wednesday, 20 February 2013

கல்வி என்பது வாழ்க்கை முழுமைக்குமான செயல்பாடு: கலாம்



           கல்வி என்பது வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அது மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். கற்பதற்கு கற்றுக்கொள்ளல், கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளல் மற்றும் வாழ்வதற்கு கற்றுக்கொள்ளல் போன்றவையே அந்த
அம்சங்கள் என்று திங்க்எடு கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் பேசினார். இந்நிகழ்ச்சியை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தியது. தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடந்த சில சுவையான சம்பவங்களை கோடிட்டு காட்டிய கலாம், தனது முன்னேற்றத்தில், தன் ஆசிரியர்களின் பங்கினையும் நினைவு கூர்ந்தார்.
                        இந்திய குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்க, படைப்புத்திறன் ரீதியான பாடத்திட்டம், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார். சிறந்த ஆசிரியர்களின் பரிணாமம் மற்றும் நல்ல கல்விமுறை ஆகியவை இப்போதைய அவசிய தேவை என்று குறிப்பிட்ட அவர், ஆசிரியர்களை நியமிக்கும் வழிமுறைகள் மாற வேண்டும் என்றார். ஆரம்பக் கல்வியில் செய்யப்படும் சிறந்த மாற்றமே, அனைத்து நிலைகளிலான கல்வியிலும் சிறந்த மாறுதல்களை ஏற்படுத்தும் என்ற அவர், சமூகத்தில், தான் காண விரும்பும் சில மாற்றங்களைப் பரிந்துரைத்தார். ஆசிரியர்களுக்கு, பல்கலை சூழலில் பயிற்சியளிப்பது, சமூகம் தனது ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுப்பது, வாழ்நாள் முழுவதும், கற்றுக்கொள்ளும் தாகத்தை ஆசிரியர்கள் பெற்றிருப்பது உள்ளிட்ட, இந்திய கல்வி அமைப்பின் மீதான தனது பார்வையை வெளிப்படுத்தினார். ஆராய்ச்சி மற்றும் தேடுதல், படைப்புத்திறன் மற்றும் புத்தாக்கம், உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன், தன் முனைப்பு மற்றும் நேர்மையான தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
                           மேற்கூறிய திறன்களை மாணவர்கள் பெற, பள்ளிகளும், பல்கலைகளும், இரண்டுவிதமான குழுக்களை உருவாக்க வேண்டும் என்றார். ஒரு குழு, சிறப்புத் திறன்கள் தொடர்பான, சிறப்பு அறிவுடைய, திறன்வாய்ந்த இளைஞர்களைக் கொண்ட உலகளாவிய குழு. மற்றது, உயர்கல்வியைப் பெற்ற இளைஞர்களைக் கொண்ட குழு என்பதே அவரின் விளக்கம். உலகளாவிய அங்கீகாரம் பெற, இந்தியக் கல்வி கொள்கையில் ஒரு புரட்சி ஏற்பட, அவர் அழைப்பு விடுத்தார். கார்பரேட் நிறுவனங்கள், தங்களின் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வு பணியில் தாராளத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென ஊக்கப்படுத்தினார். முழு கல்வியறிவு என்ற சாதனையை அடைய, கல்வி நிறுவனங்கள் - அரசு - அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே தேவைப்படும் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார். இந்த ஒருங்கிணைப்பானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலுள்ள சிறந்த வேலைவாய்ப்பிற்கான போட்டி நிறைந்த மனிதவளம் பற்றி தரவுதளத்தை(database) உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment