Monday 18 February 2013

உண்டு உறைவிட பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி



                    அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும், உண்டு உறைவிடப் பள்ளியில், இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் அடுத்து உள்ளது தாமனேரி. இங்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பில், உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. படிப்பை
இடையில் கைவிட்ட மாணவர்களை கண்டுபிடித்து, அந்த மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவ, மாணவியர் என, தனித்தனியே பள்ளி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 49 மாணவியரும், 54 மாணவர்களும் படித்து வருகின்றனர். அவர்களின் வயதுக்கு ஏற்ற பாடம் சொல்லிக் கொடுக்கப்படும். அதற்காக, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
                             மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின், அவர்கள் முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர். பயிற்சி காலத்தில், இந்த மாணவர்களுக்கு, உண்டு உறைவிடப் பள்ளியில் தங்குவது, கல்வி கற்பது, உணவு என, அனைத்தும் இலவசம். இவர்களுக்கு பால், காய்கறிகளுடன் கூடிய சத்தான உணவு சமைத்து தரப்படுகிறது. இதற்காக சமையலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, வட்டார கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவர்களை குழுக்களாக பிரித்து, கல்வி கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட வயது உள்ள மாணவர்களுக்குள் நட்பு வளர்கிறது. விவாதம் செய்து தக்க முறையில் பிரச்னையை ஆய்வு செய்யும் திறன் வளர்கிறது. பயிற்சி காலமான, 18 மாதங்களில், முழு தேர்ச்சி பெற்று, சாதாரண பள்ளிகளில் பயில்வதற்கான தகுதியை அடைந்து விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment