Wednesday 20 February 2013

கல்விக் கட்டணம் நிர்ணயம்: ஐகோர்ட் புது வழிமுறை



          கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கு ஆகும் செலவை, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கருத்தில் கொள்ள வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் சேரும், மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கிறது. 2011ம் ஆண்டு, பிப்., மே, ஜூன்
மாதங்களில், நீதிபதி குழு நிர்ணயித்த, கல்விக் கட்டணத்தை எதிர்த்து, ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சென்னையைச் சேர்ந்த கிரேஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகள், சேலம், கோபிச்செட்டிப்பாளையம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் என, மொத்தம், எட்டு பள்ளிகள் சார்பில், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
                          
மனுக்களில், "பள்ளிகளுக்கு ஆகும் மொத்த செலவை, குழு, கணக்கில் கொள்ளவில்லை. சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, சம்பளம் வழங்குவதன் மூலம், 33 சதவீதம் செலவு அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு போதிய சந்தர்ப்பம் வழங்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், குறைவானது. இதை வைத்து, பள்ளிகளை நடத்துவது கடினம். மனுக்களை புதிதாக பரிசீலிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திரபாபு அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. பள்ளிகள் சார்பில், வழக்கறிஞர்கள் ஆர்.சுரேஷ்குமார், காட்சன் சுவாமிநாத், நாராயணசாமி, சீனிவாச மோகன், அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகினர்.
                          
டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: இந்த கல்வியாண்டு முதல், கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக, பள்ளிகள் தரப்பில், கேள்வித்தாள் படிவம், சமர்பிக்க வேண்டும் என்றும், அந்தப் படிவத்தை, வெப்சைட்டில் வெளியிட்டுள்ளோம் என்றும், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கான செலவு விவரங்கள், ஐகோர்ட்டின் வழிகாட்டு அடிப்படையில், கேள்வி படிவம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, கேள்வித்தாள் படிவத்தை சமர்பிக்க வேண்டியது, மனுதாரர்கள் பள்ளிகளைப் பொருத்தது. இந்தப் பள்ளிகள் சமர்பிக்கும் கேள்வித்தாள் படிவத்தை பரிசீலிக்கும் போதும், கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் போதும், பள்ளிகளுக்கு ஆன செலவுகளை, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கருத்தில் கொள்ள வேண்டும். கேள்வித்தாள் படிவத்தில் கூறப்பட்டுள்ள, விவரங்களை உறுதி செய்வதற்காக, மனுதாரர் பள்ளிகள் தரப்பில் ஆதாரங்களை அளிக்க, அந்தப் பள்ளிகளுக்கு போதிய சந்தர்ப்பத்தை, கல்விக் கட்டண நிர்ணயக் குழு வழங்க வேண்டும். இந்த மனுக்கள், பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது
.

No comments:

Post a Comment