Monday 4 February 2013

ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால் தான் இன்று நீதிபதியாக உள்ளேன்: உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்



                                எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால்தான் இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன் என்றும், ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் கண்டிப்பாக வெற்றியாகத்தான் இருக்கும் என்றும் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர் வித்யாலயாவில் நடைபெற்ற 9-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார். விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் மேலும் பேசுகையில் கூறியதாவது: மாணவர்களாகிய நீங்கள் நாளை சமுதாயத்தை ஆள வேண்டும். பள்ளியில் மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அதற்கு பின்னராவது மாணவர்கள் திருந்தி, சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான். இதனைப் பெற்றோர் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்தததால்தான் இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன். நான் படிக்கும் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் தவறு செய்யும் போது ஆசிரியர்கள் கண்டித்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். ஆனால் அதை அப்போது பெற்றோர் குறை சொல்லவில்லை. நல்லதற்கு என்றுதான் கூறினார்கள்.
                              
வீட்டில் ஒன்று அல்லது இரு குழந்தைகளை வைத்துள்ளார்கள். சனி, ஞாயிறு விடுமுறை என்றால்  பிள்ளைகளை வைத்து பெற்றோரால் சமாளிக்க முடியுமா? ஏன் பள்ளிக்கு விடுமுறை விடுகிறார்கள் என்கிறார்கள். பல்வேறு சூழ்நிலையில் வளர்க்கப்பட்டுள்ள, வெவ்வேறு குணநலன் கொண்ட பிள்ளைகளை வைத்து ஆசிரியர்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் சிறந்த குடிமக்களாக உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், சில கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்தால்தான் பள்ளி நிர்வாகம் நடைபெற இயலும். பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகள் வரும்போது அதனை புறக்கணித்துவிடுங்கள்.இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். மாணவர்களை நல் வழிப்படுத்த கண்டிப்பு அவசியம் தேவை.உங்கள் பிள்ளைகள் எந்த பாடத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் விருப்பப்படி பொறியியல், மருத்துவம் எடுத்து படிக்க வையுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். பெற்றோர் மாணவர்களை அடுத்த மாணவர்களுடன் ஒப்பிட்டு குறை கூறாமல், ஊக்குவிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை என்றும் வெற்றிகரமாகத்தான் இருக்கும். கடின உழைப்பு இருந்தால் மாணவர்கள் நாளை சரித்திரம் படைக்கலாம் என்று கூறினார்.
                             
விழாவிற்கு தாளாளர் கொ.சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ரேணுகா ஆண்டறிக்கையை சமர்பித்தார்.கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு நீதிபதி வெங்கட்ராமன் பரிசுகளை வழங்கினார். விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிர்வாக அதிகாரி சங்கரநாராயணன் நன்றி கூறினார்
.

No comments:

Post a Comment