Sunday 10 February 2013

ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்



                      மாநிலத்தில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளதால், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கையை மறுக்கக் கூடாது" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாண்டியன் கூறியதாவது: தமிழகத்தில்
உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான, பல்கலைக்கழக, தன்னாட்சி கல்லூரிகளின் பருவ தேர்வு அட்டவணை, விடைத்தாள் திருத்துதல் மற்றும் தேர்வு முடிவு வெளியீட்டை சீரமைத்து, ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர், மற்ற பல்கலைக்கழக எல்லைகளுக்குட்பட்ட, கல்லூரிகளில் சேர விரும்பினால், விண்ணப்பத்திலேயே, பல்கலைக்கழக பகுதியை சுட்டி காட்டுவதற்காக, விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
                      மாநிலத்தில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளதால், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது என, தமிழக அரசு மறுக்கக் கூடாது. தொழிற்கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, மாணவர் சேர்க்கை கட்டணங்கள், நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சீரமைப்பு குழுக்களின் முடிவுகளின் படி, அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் சூழ்நிலை போல, சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தையும், சீராய்வு செய்ய வேண்டும். சுயநிதி கல்லூரிகளில், 50 சதவீத இடங்களை, அரசு ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்தில், மாணவர் சேர்க்கை அதிகாரம், கல்லூரி முதல்வர்களுக்கு வழங்கப்படுகிறது. இதைத் திருத்தி, மாணவர் சேர்க்கைக்கு குழு உருவாக்கி, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
                              தொழிற்கல்வி கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை போல, ஒரே விண்ணப்பத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும், விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் மூலம், கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை, ஒற்றை சாளர முறையில் மேற்கொள்ளலாம். இவ்வாறு பாண்டியன் கூறினார்.

No comments:

Post a Comment