Friday 15 February 2013

திருப்புதல் தேர்வு ஒரு தொந்தரவல்ல...



          ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே போதும். அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு படபடப்பு தொடங்கிவிடும். அதிலும் குறிப்பாக, 12ம் வகுப்பு மாணவர்கள், மார்ச் மாதத்திலேயே தேர்வை எதிர்கொள்பவர்களாக இருப்பதால், புத்தாண்டிலிருந்து
பதட்டத்துடனேயே காணப்படுவார்கள். பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கு முன்னதாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பல மாணவர்கள், இத்தேர்வுகளை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. பலர் அதை ஏதாவது ஒரு காரணம் கூறி, எழுதுவதையும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், அத்தேர்வின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டால், நாம் அதிக நன்மைகளை அடையலாம்.
                          
பொதுவாக, முழு திருப்புதல் தேர்வு என்பது, பொதுத்தேர்வுக்கான ஒரு முன்னோட்டம்தான். நாம் எந்தளவிற்கு பொதுத்தேர்வுக்கு தயாராகி விட்டோம் என்பதை மதிப்பிடவே, அது நடத்தப்படுகிறது. இந்த திருப்புதல் தேர்வில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை வைத்தும், நாம் பெறும் மதிப்பெண்களை வைத்தும், நமது தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம். அதன்மூலம், எந்தெந்தப் பகுதிகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அத்தகைய பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை அள்ளலாம். திருப்புதல் தேர்வை ஒரு தொல்லையாகவே பல மாணவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அது ஒரு சோதனை ஓட்டம்தான். அதன்மூலமாக, நிஜப் போட்டிக்கு நாம் நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்கிறோம்.
                          
மேலும் இந்த ஆயத்த நிலையானது பொதுத் தேர்வுக்கு மட்டுமின்றி அதன்பிறகு வரும் நுழைவுத் தேர்வுகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகையில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வாறு சிறப்பாக எழுதுவது என்ற பயிற்சி கிடைக்கிறது. இந்த திருப்புதல் தேர்வை எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுவதன் மூலமாக, பொதுத்தேர்வைப் பற்றிய பயம் பெருமளவு குறைகிறது. எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்துபயிற்சி செய்தால், அதன் மீதான செயல்பாட்டு பயம் இல்லாது போய்விடும் என்பது ஒரு பொது உண்மை. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த தேர்வு பயிற்சியும்.
                             
எனவே, மாணவர்கள், இந்த திருப்புதல் தேர்வை ஒரு சுமையாகவோ அல்லது விளையாட்டாகவோ கருதாமல், அதை, பொதுத்தேர்வுக்கான ஒரு முன்னோட்டமாக எடுத்துக்கொண்டு, சிறப்பாக படித்து, பொதுத்தேர்வாக நினைத்து எழுதி அதிக மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது, பொதுத்தேர்வில் நீங்கள் சாதிப்பது சுலபமாகவே இருக்கும்
.

No comments:

Post a Comment