Friday 15 February 2013

இந்திய உயர்கல்வி நிதி தாராளம் - செயல்பாடுதான் சரியில்லை...



            இந்திய உயர்கல்வி உலகளவில் ஒப்பிடுகையில் எந்தளவு தரமாக உள்ளது என்பது பெரியளவிலான விவாதப் பொருளாக உள்ளது. உயர்கல்விக்கு இந்நாட்டில் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதும் விரிவாக அலசப்பட வேண்டிய விஷயம். தனது மொத்த உள்நாட்டு
உற்பத்தியில், கல்விக்கென்று இந்தியா செலவழிக்கும் தொகையானது, அமெரிக்கா, தென்கொரியா போன்ற முன்னேறிய நாடுகளோடு ஒப்பிடுகையில் அதிகம் என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை. இந்தியாவின் பங்கான 3%த்தில், 1.2% பொது வளத்திலிருந்தும், 1.8% தனியார் வளத்திலிருந்தும் செலவழிக்கப்படுகின்றன. அதேசமயம், அமெரிக்காவைப் பொறுத்தவரை, 1% பொது வளத்திலிருந்தும், 1.6% தனியார் வளத்திலிருந்தும் செலவழிக்கப்படுகிறது.
                        தென்கொரியாவைப் பொறுத்தவரை, விகிதாச்சாரம், முறையே, 0.7% மற்றும் 1.9% என்ற அளவில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஒதுக்கப்படும் பணமானது, முறையான வகையிலும், சிறப்பான முறையிலும் செலவழிக்கப்படுவதை உறுதிசெய்தல் அவசியமாகிறது. இந்தியாவிற்கு சமமான அந்தஸ்திலுள்ள உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில், உயர்கல்வியில் நுழைவோர் எண்ணிக்கை, அந்த நாடுகளைவிட அதிகம். தற்போது திட்டமிடப்பட்டுள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 18% என்ற அளவில் இருக்கும் அந்த எண்ணிக்கையை, 25% என்ற அளவில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில், உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தரப்படும் ஊதியம் மிக அதிகமாக உள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து, பிரிக்(BRIC) எனப்படும் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய உயர்கல்வி ஆசிரியர்களின் சம்பளம் அதிகம்.
பணத்திற்கான மதிப்பு
          உயர்கல்விக்காக, இந்தியாவில் இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டாலும், அதற்கான பலன் கிடைக்கிறதா என்பதை யோசித்தால், கிடைக்கும் விடையானது, மனதுக்கு கஷ்டமாகவே இருக்கும். சர்வதேச ஒப்பீட்டளவில், இந்தியாவின் ஒரு உயர்கல்வி நிறுவனம் கூட, உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறுவதில்லை. மாணவர்களிடமிருந்து பெறும் நிதியானது, முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. இந்த விஷயத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை. இந்தியாவில், இளநிலைப் படிப்புகளை வழங்கும் 34,000 கல்லூரிகள், முறையான உள்கட்டமைப்பு, உபகரணம் மற்றும் ஆசிரியர்கள் போன்ற வசதிகளின்றி இருக்கின்றன. 3ல் 2 பங்கு கல்லூரிகள், அரசு நிர்ணயித்த விதிமுறைகளை பூர்த்தி செய்வதில்லை. இதற்கு, பல்கலைகளுடனான இணைப்புத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளே காரணமாக கூறப்படுகிறது. இந்த இணைப்புத் திட்டத்தில் சில சீர்திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது. பாடத்திட்டத்தில் செய்யப்படும் சீர்திருத்தம், சிறப்பான பயனைத் தரும். இதன்மூலம், கல்லூரிகள் சுதந்திரமளிக்கப்பட்டு, புத்தாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும். கல்லூரிகள் இணைந்து செயல்படுதல் அல்லது ஒன்றாக்குதல் என்பது, இந்த சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதி.
                       மேலும், அதிகமான கல்லூரிகளின் இணைப்புப் பெற்றுள்ள ஒரு பல்கலைக்கழகம், சில பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவின் கீழும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கல்லூரிகள் மட்டுமே இடம் பெற செய்தல் என்பதும் முக்கியமான ஒன்று. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்ற அம்சத்தைப் பொறுத்தமட்டில், உலகின் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா 40 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. கடந்த 1940களில், மாணவர் சேர்க்கையானது, அமெரிக்காவில் 15% என்ற அளவில் இருந்தது. அடுத்த பல பத்தாண்டுகள் கழித்து, பல நாடுகள், அந்த இலக்கினை எட்டின. கடந்த 1975ம் ஆண்டு வாக்கில், பிரிட்டன் 18%, ஆஸ்திரேலியா 23%, பிரான்ஸ் 24% மற்றும் ஜப்பான் 25% என்ற அளவில் இருந்தன.
                         தென்கொரியாவைப் பொறுத்தளவில், 1975ம் ஆண்டுவாக்கில், 8% என்ற அளவிலிருந்து, 1980ம் ஆண்டில், 13% என்ற அளவிற்கு உயர்ந்தது. மேலும், 1985ம் ஆண்டுவாக்கில், அது ஒரேயடியாக 34% என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டது. மேற்கூறிய, இந்த நாடுகள் அனைத்தும், சர்வதேச தரத்திலான உயர்கல்வி என்ற நிலைக்கு நெருங்கி வந்து, தங்களின் தரத்தை நிரூபித்துள்ளன. அதேசமயம், தகுதியான பணியாளர்களின் தேவைக்கேற்ப, இந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வளர்ந்துள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த நாடுகளில், வேளாண்மைக்குத் தேவைப்படும் மனிதவளம் 5%க்கும் குறைவானதாக உள்ளது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள்தொகையில் பாதிபேர், வேளாண்மை துறையில் இன்றும் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, இந்தவகையில் பார்த்தால், இந்தியாவின் தற்போதை உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் போதுமான அளவிலேயே உள்ளது என்பது ஒரு கருத்தாக உள்ளது.
                          இந்திய உயர்கல்வியைப் பொறுத்தவரையில், பொருளாதாரத்திற்கு ஊட்டம் தரக்கூடிய துறையைத் தேர்ந்தெடுத்து, அதிக மாணவர்கள் படிப்பதில்லை என்பதும், அவர்களின் விருப்பமான பணியைப் பெறுவதற்கான படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதில்லை என்பதும் சவாலான விஷயங்களாக உள்ளன. எனவே, இந்தியாவில், அதிகமாக இருக்கும் பணிகளுக்கு, தகுதியான பட்டதாரிகள் கிடைப்பதில்லை என்பது ஒரு பெரும் குறையாக உள்ளது. இந்திய உயர்கல்வியில், பேராசிரியர்கள் அதிக சம்பளம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டிய அவசியமிருப்பதில்லை. அவர்களின் தரம் மற்றும் செயல்பாடு முறையாக மதிப்பிடப்படுவதில்லை. அவர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவை, சீனியாரிட்டி அடிப்படையிலேயே நடைபெறுகிறது. கடந்த 2006ம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட அபரிமித சம்பள உயர்வானது, எந்தவிதமான தர மதிப்பீடுகளின் படியும் நடைபெறவில்லை என்பது துரதிருஷ்டவசமான ஒன்றுபேராசிரியர்களுக்கான பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றுக்கான மிகச் சரியான தர நிர்ணயம் அம்சம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, பல ஆழமான விஷயங்கள் இருந்தாலும், உயர்கல்வித் துறையின் செயல்பாடானது, முடக்கி வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
எதற்கு முக்கியத்துவம்?
             இந்தியாவைப் பொறுத்தவரை, உயர்கல்வி துறையில் சில சாதனைகளை செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், இந்திய உயர்கல்வி அமைப்பில் இருக்கும், கெட்டிதட்டிப்போன அம்சங்களை சீர்திருத்துவது மிகப்பெரிய சவால். இந்திய உயர்கல்வித் துறையைப் பொறுத்தமட்டில், செலவினம் என்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சிறந்த செயல்பாடு என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment