Saturday, 2 February 2013

சாட்டை : ஒரு மீள் பார்வையில்... ம. நவீன்



                         சுருங்க சொன்னால், சாட்டை... ஆசிரியர்களுக்கானது; மாணவர்கள் நலனை பேசுவது போல காட்டினாலும் அது அவ்வாறு இல்லை. குழந்தைகளுக்கு பறந்து செல்லும் சவர்க்கார நுரை போதும்... சுழற்கிண்ணங்கள் எப்போதும் சுமைதான்.சாட்டை
திரைப்படம் குறித்து நண்பர்கள் பலரும் சொல்லியிருந்தனர். பார்ப்பதற்கு முன்பே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். தாமதமாகத்தான்  தொலைக்காட்சியில் தங்கத்திரையில் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்த்த உடனே படம் கவர்ந்தது. தங்கத்திரையில் அம்மாதம் முழுவதும் ஒரே படத்தை ஒளிபரப்புவார்கள் என்பதால் மீண்டும் சில முறை அப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அடுத்தடுத்த முறை பார்த்தப் பின்பே நான் அப்படத்தை ஓர் ஆசிரியராக மட்டுமே இருந்து பார்த்ததை அறிந்துகொண்டேன்.
                              
சாட்டை, ஆசிரியர் சமூகத்திடம் உள்ள பின்னடைவுகளை விமர்சிக்கிறது. ஓர் ஆசிரியர் என்னவாக இருக்க வேண்டும்... ஆனால், என்னவாக இருக்கிறார்கள் என அது விரிவாகப் பேசியிருந்ததைப் பாராட்டலாம். ஆனால், அப்படம் புதிய கருத்தாக்கத்தைப் பேசவில்லை என்பதே இங்குச் சிக்கல்அதாவது ஓர் ஆசிரியர் முறையாகப் பாடம் போதிக்க வேண்டும், பள்ளி தளவாடங்கள் சுய தேவைக்காக அல்ல, மாணவர்களை ஆசிரியர் வேலை வாங்க கூடாது, அவர்களின் சுய கௌரவத்தை மதிக்க வேண்டும்... இப்படி படம் முழுக்க ஆசிரியர்கள் தம் பணியிடங்களில் மறந்த விசயங்களை நினைவு படுத்துகிறது. அதோடு, ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்குமான உறவு, சோம்பல் படாமல் ஆசிரியர் மாணவர்கள் முன்னேற்றத்துக்காக உழைப்பது போன்ற சென்டிமென்டான விடயங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், இதனால் ஒரு படம் சிறந்ததாகிவிடுமா என யோசித்தால் இல்லை என்பதே பதில்.
                           
அமுலில் உள்ள சூழலை அல்லது கடமையை அதை மறந்த ஒரு சமூகத்திடம் நினைவுப் படுத்துவது புதுமையோ புரட்சியோ அல்ல என்பதை ஒப்புக்கொண்டால் நாம் இப்படத்தை மீண்டும் ஒரு மறுபார்வை செய்ய இயலும். 'Taare Zameen Par' திரைப்படம் போன்றோ குறைந்த பட்சம் 'நண்பன்' திரைப்படம் போன்றோ அப்படம் இருக்கின்ற கல்வி சூழலை கேள்வி எழுப்பவில்லை, மாறாக ஆசிரியர்களின் தவறுகளை எடுத்துச் சொல்கிறது. ஒரு போலிஸிடம் "லஞ்சம் வாங்காதே" எனச் சொல்வது போலவும் , ஒரு மருத்துவரிடம் "நோயாளிக்கு நேர்மையாக மருத்துவம் பார்" என ஆலோசனை சொல்வது போன்றும் இப்படம் ஆசிரியர்களுக்கு அறிவுரை சொல்கிறது. ஆனால் அது மறைமுகமாக மீண்டும் வலியுறுத்துவது கல்வியைப் போட்டியாகப் பார்க்கும் மனநிலையைதான். தன் மகனை தனியார் பள்ளிக்கு அனுப்பிவிட்டு , அரசு பள்ளியில் நுழையும் துணைத்தலைமை ஆசிரியர்தான் (தம்பி ராமையா) இங்கு உள்ள பல ஆசிரியர்களின் பிரதிநிதி. தங்கள் பிள்ளைகளை வேறு மொழி பள்ளியில் சேர்த்துவிட்டு , தாம் போதிக்கும் பள்ளியில் மாணவர்களுக்குக் கூடுதலாக எந்த உழைப்பையும் வழங்காமல் சதா அவர்களைக் குறைக்கூறிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஒருதரம் தங்கள் முகங்களை கண்ணாடியில் பார்த்து உமிழ்ந்துகொள்ளலாம். தமிழ்ப்பள்ளியில் சம்பாதித்து, அது கொடுக்கும் பணத்தில் உண்டு, உறங்கி, ஊர் சுற்றி, தம் பிள்ளையை தமிழ் தெரியாமல் வளர்க்கும் போக்கு மலிந்துவிட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் இருப்பது தங்கள் குறித்த தாழ்வான எண்ணமாகத்தான் இருக்க வேண்டும். இதில் தமிழ்ப்பள்ளிக்கு எவ்விதத்திலும் கடமை படாத சாமனியர்கள் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்ற பிரசாரம் வேறு. படத்தில் தோன்றும் துணைத்தலைமை ஆசிரியரான தம்பி ராமையாவைப் பார்க்கும் போதெல்லாம் இவ்வாறான எண்ணம் உருவாவதை தடுக்க இயலவில்லை.
                                    
படத்தின் முற்பகுதி இவ்வாறான தெரிப்புகளை உருவாக்கினாலும் அதன் பின்பகுதியில் உள்ளதென்னவோ இன்றைய கல்விச் சூழல் கொடுக்கும் போட்டி மனப்பான்மையைத்தான். 'நண்பன்' படத்தில் சத்யராஜ் சொல்வார் 'life is a race' என. அந்தக் கூற்றை கிண்டல் செய்தே படத்தின் போக்கும் இருக்கும். வாழ்வு ஒரு ஓட்டப்பந்தயம் இல்லை. அதிலும் கல்வி பந்தயம் அல்ல. அது ஒரு மகிழ்ச்சியான நடவடிக்கை. கற்றல் எனும் நிகழ்வு அடுத்தவரோடு ஒப்பிட்டோ போட்டியிட்டோ நடப்பதில் இல்லை... மாறாக கல்வி ஆளுமையைக் கூர் தீட்ட உதவுகிறது. 'நண்பன்' படத்தில் கிண்டல் செய்யப்பட்ட பகுதிதான் 'சாட்டை'யில் லட்சிய நோக்காக உருவெடுத்துள்ளது.  ' சாட்டை'யில் மாணவர்கள் சோதனையை எதிர்க்கொள்ள படிக்கின்றனர். இரவில் பள்ளிக்கு வந்து படிக்கின்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி படிக்கின்றனர். குழு குழுவாகப் படிக்கின்றனர். இவை குறித்து படத்தில் எவ்வித மாற்று பார்வையும் இல்லை. கல்வி என்பது மீண்டும் மீண்டும் வருத்தி செய்ய வேண்டிய ஒன்றாகவும் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாய அடைவாகவுமே காட்டப்படுகிறது. மாணவர்களிடம் உள்ள மாற்றுத்திறனும் போட்டியின் மூலமே அளவிடப்படுவதாகக் காட்டுவது இன்னும் கொடுமை.
                               
டாக்டர் சண்முகசிவா ஒருமுறை கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். "சில மாணவர்கள் திடலில் சுதந்திரமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஒருவர் திடலில் கோடுகள் போடுகிறார். அனைவரையும் கோட்டில் ஓடப் பணிக்கிறார். அனைவரும் ஓடுகின்றனர். முதலாவதாக ஓடி வந்தவன் வெற்றியாளன் எனப் பரிசுகள் தருகிறார். வெற்றி அடைந்தவன் மகிழ்கிறான்அவ்வளவு நேரம் சுதந்திரமாக விளையாடியதில் இறுதியாக வந்தவன் மனம் உடைகிறான். இதுதான் நமது கல்வி சூழல்." போட்டிகளின் மூலம் காட்டப்படும் வெற்றி படத்தில் நெகிழ்வடையக் கூடியதாக பலருக்கு இருந்தாலும் வாழ்வில் தோல்விகளைத் தழுவும் ஒரு மாணவன் மன நிலையில் அக்காட்சி கொடுக்கும் அர்த்தம்தான் என்ன? நம் நாட்டில் இன்று இலவச கல்வி குறித்த பேச்சு தொடங்கியுள்ளது. இதில் உள்ள பெரும் சிக்கலே, பலரும் ஒரே துறையை நோக்கி போகும் ஆபத்து இருப்பதுதான். காரணம், இன்று கல்வி ஆர்வத்தின் அடிப்படையில் இல்லாமல் எதை படித்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற முதலாளித்துவ மனநிலையில் இயங்குகிறது. இந்தப் போட்டி மனநிலைக்கு வித்திடுவது அடிப்படை கல்வி திட்டம்தான். எவ்வித கேள்வியும் அற்று தேர்வு என்ற ஒன்றுக்காக ரேஸ் குதிரைகள் போல் ஓடும் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை ஓட்டத்தை நிறுத்துவதே இல்லை.
                          
கல்வி எப்போது வெற்றி பெரும் என்றால், அது ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்காமல் அறிவின் விசாலத்திற்கு வழிவகை செய்யும் போதுதான். நூல்களை மனனம் செய்த பலர் இன்று சம்பளம் உயர்ந்த நாற்காலிகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்வில் முதலாவதாக வருவதோ, புள்ளிகள் அதிகம் பெருவதோ கல்வியின் தத்துவமல்ல. மாறாக அது கற்றதிலிருந்து கல்லாத ஒன்றை நோக்கி சிந்திக்கும் , ஆராயும் ஆற்றலைக் கொண்டது. அவ்வடிப்படையைக்கூட சொல்லாத சாட்டை மூன்றாம் உலக நாடுகளின் மனநிலையை மட்டுமே படம் பிடித்துக்காட்டுகிறது எனலாம். சுருங்க சொன்னால், சாட்டை... ஆசிரியர்களுக்கானது; மாணவர்கள் நலனை பேசுவது போல காட்டினாலும் அது அவ்வாறு இல்லை. குழந்தைகளுக்கு பறந்து செல்லும் சவர்க்கார நுரை போதும்... சுழற்கிண்ணங்கள் எப்போதும் சுமைதான்
.

No comments:

Post a Comment